சென்னப்பட்டணாவை கேட்கிறது பா.ஜ., தர்மசங்கடத்தில் குமாரசாமி
சென்னப்பட்டணாவை கேட்கிறது பா.ஜ., தர்மசங்கடத்தில் குமாரசாமி
ADDED : அக் 19, 2024 11:02 PM

பெங்களூரு: இடைத்தேர்தலுக்கு தயாராகும் சட்டசபை தொகுதிகளில், ராம்நகரின் சென்னப்பட்டணாவும் ஒன்று. குமாரசாமி தேசிய அரசியலுக்கு சென்றதால், காலியான தொகுதிக்கு நவம்பர் 13ல் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.
சென்னப்பட்டணா தொகுதி, குமாரசாமிக்கு கவுரவ பிரச்னையாக உள்ளது. இத்தொகுதி ம.ஜ.த.,வின் கோட்டை. எனவே தொகுதியில், கட்சியை சார்ந்தவரை களமிறக்கி, வெற்றி பெற வைப்பது இவரது எண்ணம். தன் மனைவி அனிதாவை களமிறக்குவது பற்றி ஆலோசிக்கிறார். இதற்கு கூட்டணி கட்சியான பா.ஜ., முட்டுக்கட்டையாக உள்ளது.
இக்கட்சியின் யோகேஸ்வர், சென்னப்பட்டணா தொகுதியில் போட்டியிட, மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறார். லோக்சபா தேர்தல் முடிவு வெளியான நாளில் இருந்தே, தேர்தலுக்கு தயாராகிறார்; தொகுதியில் முகாமிட்டுள்ளார்.
தனக்கு சீட் வழங்கும்படி பா.ஜ., மேலிடத்திடமும், மத்திய அமைச்சர் குமாரசாமியிடமும், பல முறை வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுவரை சாதகமான பதில் வரவில்லை. எரிச்சலில் உள்ள அவர், 'கட்சி தனக்கு சீட் கொடுக்காவிட்டாலும், சுயேச்சையாக களமிறங்கியே தீருவேன்' என, உறுதி பூண்டுள்ளார்.
சென்னப்பட்டணாவுக்கு வேட்பாளரை தேர்வு செய்யும் விஷயம், கூட்டணி கட்சிகளுக்கிடையே லேசான விரிசலை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ.,வின் சில தலைவர்கள், சென்னப்பட்டணா தொகுதியை விட்டுத்தரும்படி, குமாரசாமிக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். இதனால் அவர் தர்ம சங்கடத்தில் சிக்கியுள்ளார்.
இதுகுறித்து, ஹூப்பள்ளியில் பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், நேற்று அளித்த பேட்டி:
ம.ஜ.த.,வுக்கு நாங்கள், அரசியல் ரீதியில் மறு ஜென்மம் அளித்துள்ளோம். எனவே மத்திய அமைச்சர் குமாரசாமி, பெருந்தன்மையுடன் சென்னப்பட்டணா தொகுதியை, பா.ஜ.,வுக்கு விட்டுத்தர வேண்டும்.
யோகேஸ்வருக்கு குமாரசாமியின் உதவி வேண்டும். எங்களின் சக்தி இவருக்கு வேண்டும். ம.ஜ.த.,வுடன் கூட்டணி வைத்ததால், லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு அனுகூலமாக இருந்தது. இந்த கூட்டணி இரண்டு கட்சிகளுக்கும், லாபம் தான். எனவே இடைத்தேர்தலில், எங்கள் கட்சியை சார்ந்தவருக்கு சீட் கொடுக்க வேண்டும். குமாரசாமி தொகுதி சீட் தியாகம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.