குற்றச்செயலுக்கு காங்கிரசை தொடர்பு கொள்க பா.ஜ., 'நக்கல்'
குற்றச்செயலுக்கு காங்கிரசை தொடர்பு கொள்க பா.ஜ., 'நக்கல்'
ADDED : ஜன 05, 2025 10:58 PM
பெங்களூரு: கர்நாடகாவில் நடக்கும் குற்ற வழக்குகளை கொண்டே, மாநில காங்கிரஸ் அரசை, பா.ஜ., விமர்சித்துள்ளது.
கர்நாடகாவில் மிரட்டல், கொலை, கொள்ளை, தற்கொலை போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இது தொடர்பாக மாநில பா.ஜ., 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது:
கர்நாடகாவில் தற்கொலை மற்றும் கூலிப்படை அரசு நடக்கிறது. சித்தராமையாவும், சிவகுமாரும், 'இரண்டு எஸ்.எஸ்.,'கள். இந்த அரசில் விவசாயிகள் தற்கொலை, கூலிப்படை கொலைகள், குழந்தை பெற்ற பெண்கள் மரணம் அதிகம் நடக்கிறது. பணத்துக்காக தரமற்ற மருந்துகளை வினியோகித்து, பெண்களின் இறப்புக்கு காரணமாகி உள்ளது.
மிரட்டலுக்கு சிவகுமார், கொலைக்கு வினய் குல்கர்னி, தற்கொலைக்கு பிரியங்க் கார்கே, எம்.எல்.ஏ.,க்களை கொல்ல லட்சுமி ஹெப்பால்கர், விவசாயிகள், அதிகாரிகள் மரணத்துக்கு சித்தராமையா, மருத்துவமனை மரணத்துக்கு தினேஷ் குண்டுராவ்.
தலித்கள் மீது தாக்குதலுக்கு ஹிரியூர் சுதாகர், போலீசாரை தாக்க விஜயானந்த் காசப்பனவர், ஆபாச வார்த்தைகள் பேச அரிசிகெரே சிவலிங்கே கவுடா ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
இவர்கள், பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் இருப்பர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

