டில்லியின் முன்னேற்றத்தை தடுக்க சதி: பா.ஜ., மீது சிசோடியா குற்றச்சாட்டு
டில்லியின் முன்னேற்றத்தை தடுக்க சதி: பா.ஜ., மீது சிசோடியா குற்றச்சாட்டு
ADDED : ஆக 22, 2024 06:46 AM

புதுடில்லி: டில்லியின் முன்னேற்றத்தை தடுக்கவே, சதி செய்து முதல்வர் கெஜ்ரிவாலை பா.ஜ., சிறையில் அடைந்துள்ளது என முன்னாள் டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார்.
டில்லி சுல்தான்பூர், மஜ்ரா தொகுதி மக்களை சந்தித்து, மணிஷ் சிசோடியா பேசியதாவது: பா.ஜ.,வினர் என்னையும், முதல்வர் கெஜ்ரிவால் உட்பட பிற தலைவர்களையும் பொய் வழக்குகளில் சிறையில் அடைத்தனர். மக்களை தொந்தரவு செய்வதை பா.ஜ.,வினர் நிறுத்த வேண்டும்.
டில்லியின் முன்னேற்றத்தை தடுக்கவே சதி செய்து முதல்வர் கெஜ்ரிவாலை பா.ஜ., சிறையில் அடைந்துள்ளது. கெஜ்ரிவால் நகரின் வளர்ச்சியை முழு வேகத்தில் துவங்குவார். தற்போது, நிலவும் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பிரச்னையை கெஜ்ரிவால் வெளியில் இருந்தால் போராடி தீர்த்திருப்பார்.
பொய் வழக்கு
நாங்கள் தவறு செய்ததற்காக, எங்களை சிறையில் அடைக்கவில்லை. கெஜ்ரிவால் ஊழல் செய்து பணம் சம்பாதிக்க விரும்பினாரா? மின் கட்டணத்தை பூஜ்ஜியமாக்கினார். அதற்கு பதிலாக அதிக கட்டணம் நிர்ணயம் செய்து, அவர் பணம் சம்பாதித்து இருக்கலாம்.
ஆனால் செய்யவில்லை. கெஜ்ரிவால் அற்புதமான பள்ளிகள், மருத்துவமனைகளை உருவாக்கினார். இதையெல்லாம் எப்படி செய்வது என்று பா.ஜ.,வினருக்கு தெரியாது. இவ்வாறு அவர் பேசினார்.