ADDED : டிச 25, 2024 08:32 AM

பெங்களூரு : பா.ஜ., - எம்.எல்.சி., ரவி கைது விவகாரம் தொடர்பாக, அரசு மீது கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம், பா.ஜ., புகார் செய்துள்ளது.
கர்நாடக பெண்கள் நல அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரை, மேல்சபையில் வைத்து ஆபாசமாக திட்டியதாக கூறப்படும் வழக்கில், பா.ஜ., - எம்.எல்.சி., ரவி கடந்த 19ம் தேதி கைது செய்யப்பட்டார். உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.
தன்னை என்கவுன்டர் செய்ய சதி நடந்ததாக, ரவி பகீர் தகவல் கூறி இருந்தார். இதனால் அரசுக்கு எதிராக பா.ஜ., தலைவர்கள் ஆக்ரோஷம் வெளிப்படுத்தினர்.
ரவி கைது செய்யப்பட்ட வழக்கை, சி.ஐ.டி., விசாரணைக்கு அரசு ஒப்படைத்துள்ளது. இதையடுத்து நேற்று பெங்களூரு ராஜ்பவனில், கவர்னர் தாவர்சந்த் கெலாட்.
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் தலைமையில், மேலவை எதிர்க்கட்சித் தலைவர் சலுவாதி நாராயணசாமி, எம்.எல்.ஏ.,க்கள் ஜனார்த்தன ரெட்டி, ரகு, ராமமூர்த்தி, எம்.பி., பசவராஜ் பொம்மை, எம்.எல்.சி.,க்கள் கேசவ் பிரசாத், ரவிகுமார் ஆகியோர் சந்தித்தனர். அரசு மீது புகார் மனு அளித்தனர்.
புகாரில், 'எம்.எல்.சி., ரவி கைது விவகாரத்தில் அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. கைதின் போது அரசியலமைப்பு மற்றும் சட்டமீறல் நடந்துள்ளது. போலீஸ் துறை அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து உள்ளது. இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு உண்மை கண்டறிய வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.