ADDED : ஜன 30, 2026 04:37 AM
சண்டிகர் : சண்டிகர் மாநகராட்சி மேயராக, பா.ஜ.,வைச் சே ர்ந்த கவுன்சிலர் சவுரப் ஜோஷி தேர்வு செய்யப்பட்டார்.
சண்டிகர் மாநகராட்சிக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், மொத்தமுள்ள, 35 இடங்களில், பா.ஜ., - 18, ஆம்ஆத்மி - 11, காங்கிரஸ் ஆறு இடங்களையும் பிடித்தன. இதையடுத்து, மேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. நியமன கவுன்சிலரான ராம்நீக் சிங் பேடி, மேயர் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இந்த மேயர் தேர்தலில், பா.ஜ., சார்பில் சவுரப் ஜோஷி, ஆம்ஆத்மி சார்பில், யோகேஷ் டிங்ரா, காங்கிரஸ் சார்பில் குர்பிரீத்சிங் கபி ஆகிய மூன்று பேர் போட்டியிட்டனர்.
இந்த மும்முனைப் போட்டியில், பா.ஜ.,வைச் சேர்ந்த சவுரவ் ஜோஷிக்கு, 18 கவுன்சிலர்கள் கையை துாக்கி ஆதரவு தெரிவித்ததால், அவர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்தத் தேர்தலில், முந்தைய காலங்களில் பின்பற்றப்பட்ட ரகசிய ஓட்டெடுப்பு நடத்தப்படவில்லை.

