போட்டியிட வாய்ப்பு பறிபோகும் அச்சம்: பா.ஜ., நிர்வாகி தற்கொலை முயற்சி
போட்டியிட வாய்ப்பு பறிபோகும் அச்சம்: பா.ஜ., நிர்வாகி தற்கொலை முயற்சி
ADDED : நவ 16, 2025 11:42 PM
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட டிக்கெட் கிடைக்காது என்ற அச்சத்தில் பா.ஜ., மகளிர் அணி மாவட்டச் செயலர் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் டிசம்பர் 9 மற்றும் 11ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில், திருவனந்தபுரம் மாவட்டத்தின் நெடுமங்காடு நகராட்சி தேர்தலில், பனைகோட்டாலா பகுதி வார்டு உறுப்பினர் பதவிக்கு, பா.ஜ, மகளிர் அணி மாவட்டச் செயலர் சாலினியை களமிறக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த அவர் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். சாலினியை அவரது மகன் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சிகிச்சைக்கு பின் சாலினி வீடு திரும்பினார்.
தற்கொலை முயற்சி குறித்து சாலினி கூறியதாவது:
உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ள நிலையில் பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., ஆர்வலர்கள் சிலர், என் மீது பொய்யாக குற்றஞ்சாட்டி சில வீடியோக்களை பரப்பி வருகின்றனர். என் மீதான தனிப்பட்ட விரோதத்தில் இதை செய்து எனக்கு டிக்கெட் கிடைக்க விடாமல் தடுக்கின்றனர்.
எனது வார்டுக்கு வேறு நபரை கட்சி தலைமை பரிசீலிப்பதை அறிந்த நான் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு முயன்றேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக திருவனந்தபுரம் மாநகராட்சியின் திக்கன்னாபுரம் வார்டில் போட்டியிட டிக்கெட் மறுக்கப்பட்டதாக கூறி, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி ஆனந்த் தம்பி, 39, நேற்று முன்தினம் தற்கொலை செய்த நிலையில் சாலினியின் தற்கொலை முயற்சி அரங்கேறியுள்ளது.

