வக்ப் மசோதாவுக்கு ஆதரவு; பா.ஜ., நிர்வாகி வீடு எரிப்பு
வக்ப் மசோதாவுக்கு ஆதரவு; பா.ஜ., நிர்வாகி வீடு எரிப்பு
ADDED : ஏப் 08, 2025 12:47 AM

இம்பால்: வக்ப் திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த மணிப்பூர் பா.ஜ., சிறுபான்மை பிரிவு தலைவரின் வீட்டுக்கு, மர்ம கும்பல் தீ வைத்ததை அடுத்து அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.
முஸ்லிம்களுக்கான வக்ப் சட்டத்தில், பல்வேறு திருத்தங்களை மத்திய அரசு செய்து உள்ளது. இதற்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
இருப்பினும், காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இந்த சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரிலும் வக்ப் வாரிய சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன.
இங்கு, பா.ஜ.,வின் மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்கர் அலி, வக்ப் வாரிய சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக சில கருத்துகளை சமூக வலைதளத்தில் சமீபத்தில் வெளியிட்டார்.
இதனால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், தவுபால் மாவட்டம் லிலாங்கில் உள்ள அவரின் வீட்டை நேற்று முன்தினம் இரவு முற்றுகையிட்டனர்.
கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் திரண்ட நுாற்றுக் கணக்கானோர் அடங்கிய கும்பல், அஸ்கர் அலியின் வீட்டை சேதப்படுத்தியதுடன், தீ வைத்தும் எரித்தனர். அஸ்கர் அலி மற்றும் பா.ஜ.,வுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
சம்பவம் நடந்த லிலாங் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை சமாளிக்கும் வகையில், அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே வக்ப் மசோதாவுக்கு எதிராக மணிப்பூரின் பல பகுதிகளில் நேற்றும் போராட்டங்கள் வெடித்தன.
இம்பால் மாவட்டத்தின் லிலாங்கில், தேசிய நெடுஞ்சாலையில் 5,000க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றதால், போக்குவரத்து ஸ்தம்பித்தது. தவுபாலில் உள்ள இரோங் செசாபாவிலும் மறியல் போராட்டம் நடந்தது. இதனால், அங்கு பதற்றம் நிலவுகிறது.