ஹரியானாவில் பா.ஜ., பலம் கூடியது 2 சுயேச்சைகள் உட்பட 3 பேர் ஆதரவு
ஹரியானாவில் பா.ஜ., பலம் கூடியது 2 சுயேச்சைகள் உட்பட 3 பேர் ஆதரவு
ADDED : அக் 09, 2024 11:30 PM

புதுடில்லி: ஹரியானா சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற இருவர் உட்பட மூன்று பேர், பா.ஜ.வுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதன் வாயிலாக, பா.ஜ.,வின் பலம் 51 ஆக அதிகரித்து உள்ளது.
ஹரியானாவில், 90 சட்டசபை தொகுதிகளுக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், தொடர்ந்து இரு முறை ஆட்சியில் இருந்த பா.ஜ., ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.
பெரும்பான்மைக்கு 45 இடங்கள் தேவை என்ற நிலையில், 48 இடங்களில் அக்கட்சி வென்று சாதனை படைத்துள்ளது.
சட்டசபை தேர்தலில் பா.ஜ., 'சீட்' அளிக்காததால் அதிருப்தி அடைந்த அக்கட்சி நிர்வாகி தேவேந்தர் காத்யன், கனுார் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றார். பகதுார்கார் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட ராஜேஷ் ஜூன், பா.ஜ., வேட்பாளரை தோற்கடித்தார்.
இந்நிலையில், மத்திய அமைச்சரும், ஹரியானா பா.ஜ., மேலிட பொறுப்பாளருமான தர்மேந்திர பிரதான் வீட்டில், மாநில பா.ஜ., தலைவர் மோகன் லால் படோலி முன்னிலையில், தேவேந்தர் காத்யன், ராஜேஷ் ஜூன் ஆகியோர் பா.ஜ.,வில் நேற்று இணைந்தனர்.
இதேபோல், கடந்த மார்ச்சில் பா.ஜ.,வில் இணைந்த, நாட்டின் மிகப்பெரிய பணக்கார பெண்களில் ஒருவரான சாவித்ரி ஜிண்டால், சட்டசபை தேர்தலில் சீட் கிடைக்காததால், ஹிசார் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றார்.
இவரும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து, பா.ஜ.,வுக்கு ஆதரவு வழங்கினார். இதன் வாயிலாக, ஹரியானா சட்டசபையில் பா.ஜ.,வின் பலம், 48ல் இருந்து 51 ஆக அதிகரித்துள்ளது.