மக்களை கொள்ளையடித்து காங்கிரஸ் ஏற்படுத்திய காயத்தை பாஜ அரசு குணப்படுத்துகிறது: பிரதமர் மோடி
மக்களை கொள்ளையடித்து காங்கிரஸ் ஏற்படுத்திய காயத்தை பாஜ அரசு குணப்படுத்துகிறது: பிரதமர் மோடி
ADDED : செப் 25, 2025 04:55 PM

பன்ஸ்வாரா: '' மக்களை கொள்ளையடித்தும், ஊழல் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டும் காங்கிரஸ் ஏற்படுத்திய காயத்தை பாஜ அரசு குணப்படுத்தி வருகிறது,'' என பிரதமர் மோடி பேசினார்.
ராஜஸ்தான் சென்றுள்ள பிரதமர் மோடி ரூ.1.2 லட்சம் கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவடைந்த திட்டங்களையும் துவக்கி வைத்தார். 3 வந்தே பாரத் ரயில்களை துவக்கி வைத்தார். அணுமின் நிலையத்துக்கும் அடிக்கல் நாட்டினார்.
மாநிலங்களுக்கு முக்கியத்துவம்
இதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது: நவராத்திரி அன்று 9 வகையான சக்திகளை நாம் வணங்குகிறோம். ராஜஸ்தானில் இருந்து எரிசக்தி துறையில் இந்தியாவின் வலிமைக்கு ஒரு புதிய சகாப்தம் எழுதப்படுகிறது. 90 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் புதிய மின்திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாநிலத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
21ம் நூற்றாண்டில் வேகமாக முன்னேற விரும்பும் எந்தவொரு நாடும் மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். மின்சாரத்துக்கு காங்கிரஸ் எப்போதும் முக்கியத்துவம் அளித்தது கிடையாது. 2014 ல் பிரதமராகும் வாய்ப்பு கிடைத்த போது, 2.5 கோடி வீடுகள் மின்சார வசதி இல்லாமல் இருந்தது. நாடு சுதந்திரம் பெற்ற 70 ஆண்டுகள் கடந்தும் 18 ஆயிரம் கிராமங்களில் மின்கம்பங்கள் இல்லை.
மக்கள் இயக்கம்
பெரிய நகரங்கள் நீண்ட நேரம் மின்சார தடையை சந்தித்து வந்தன. கிராமங்களில் 4-5 மணி நேரம் மின்சாரம் இருந்தாலே அதனை கொண்டாடினர். 2014 ல் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இதை மாற்ற வேண்டும் என முடிவெடுத்தோம். ஒவ்வொரு கிராமத்துக்கும் மின்சாரம் வழங்கினோம். 2.5 கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது. சுத்தமான எரிசக்தியை மக்கள் இயக்கமாக மாற்ற பணியாற்றி வருகிறோம்.
மக்களை கொள்ளையடித்து, ஊழல் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்ட காங்கிரசால் ஏற்பட்ட காயத்தை பாஜ அரசு குணப்படுத்தி வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில், வினாத்தாள் கசிவுக்கு மையமாக ராஜஸ்தான் இருந்தது. ஜல்ஜீவன் இயக்கம், ஊழல் காரணமாக நிறுத்தப்பட்டது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்ததுடன், பலாத்கார சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் பாதுகாக்கப்பட்டனர். குற்றங்கள் மற்றும் சட்டவிரோத மதுபான தொழில் வளர்ந்தது. ஆனால், பாஜ ஆட்சிக்கு வந்ததும், நாங்கள் சட்டம் ஒழுங்கை பலப்படுத்தினோம். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினோம்.
தனி இலாகா
ஜிஎஸ்டி சேமிப்பு திருவிழாவை ஒட்டு மொத்த தேசமும் கொண்டாடி வருகிறது. தினசரி பயன்படுத்தும் பொருட்கள் விலை குறைந்துள்ளன. ஆதிவாசி சமூகத்தினரை காங்கிரஸ் எப்போதும் புறக்கணித்தது. அவர்களின் தேவைகளை அக்கட்சி புரிந்து கொண்டது கிடையாது. ஆனால் பாஜ அரசு அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களுக்கு என தனி இலாகாவை உருவாக்கினோம். வாஜ்பாய் ஆட்சியில் பழங்குடியினருக்கு என முதல்முறையாக தனி இலாகா உருவாக்கப்பட்டது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.