ADDED : பிப் 05, 2025 06:49 AM
கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராக, பல அஸ்திரங்கள் உள்ளன. இவற்றை திறமையாக பயன்படுத்தி, அரசுக்கு குடைச்சல் கொடுக்க வேண்டிய எதிர்க்கட்சியான பா.ஜ., உட்கட்சி பூசலில் தள்ளாடுகிறது. இது கர்நாடகாவில் பா.ஜ., தொய்வடைய காரணமாக உள்ளது.
கடந்த 2019ல் காங்கிரஸ், ம.ஜ.த.,வின் 17 எம்.எல்.ஏ.,க்களை ஈர்த்து, கூட்டணி அரசை கவிழ்த்து ஆட்சிக்கு வந்த பா.ஜ., பல பிரச்னைகளுக்கிடையே, நான்கு ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்தது. 2023 சட்டசபை தேர்தலின் போது, கட்சியில் கோஷ்டி பூசல் காரணமாக, ஆட்சியை காங்கிரசிடம் பறி கொடுத்தது. வெறும் 66 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.
தேர்தலில் பலத்த அடி வாங்கியும், பா.ஜ., பாடம் கற்கவில்லை. கட்சியை பலப்படுத்துவதில், தலைவர்கள் ஆர்வம் காட்டவில்லை. கட்சியில் கோஷ்டி பூசல் அதிகரிக்கிறதே தவிர, குறையவில்லை. குறிப்பாக விஜயேந்திராவை, மாநில தலைவராக நியமித்த பின், கட்சியில் பூசல் அதிகரித்துள்ளது.
கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சி, பலப்படுத்தி 2028ல் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில், லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த விஜயேந்திராவுக்கு, மேலிடம் பொறுப்பு அளித்தது.
ஆனால் தங்களை விட வயது, அரசியல் அனுபவத்தில் குறைந்தவரான விஜயேந்திராவுக்கு வாய்ப்பளித்ததால், மூத்த தலைகள் எரிச்சல் அடைந்துள்ளன. இவரை தலைவராக ஏற்க முடியாது என்பதில், உறுதியாக உள்ளனர். இவரை நீக்கும்படி மேலிடத்துக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.
உட்பூசலால், கட்சி தொய்வடைந்துள்ளது. தொண்டர்களிடம் உற்சாகத்தை காண முடியவில்லை. இதே காரணத்தால் லோக்சபா தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி பெற முடியவில்லை.
ஷிகாவி, சண்டூர், சென்னப்பட்டணா தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலிலும் பா.ஜ., மண்ணை கவ்வியது.
பா.ஜ.,வுக்கு ஆளுங்கட்சியான காங்கிரசை விட, சொந்த கட்சியினரே பெரும் தலைவலியாக வாட்டி வதைக்கின்றனர்.
அரசுக்கு எதிராக வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு, முடா முறைகேடுகள், சில அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் என, பல அஸ்திரங்கள் கிடைத்தன.
இவற்றை சரியாக பிரயோகித்திருந்தால், அரசு ஆட்டம் கண்டிருக்கும். ஆனால் எதிர்க்கட்சி தலைவர்கள், கோஷ்டி பூசலில் ஈடுபட்டு காலத்தை கடத்துகின்றனர்.
தற்போது விஜயேந்திரா, பசனகவுடா பாட்டீல் எத்னால் இடையிலான பனிப்போர், வீதிக்கு வந்துள்ளது. பகிரங்கமாகவே சவால் விடுக்கின்றனர்.
விஜயேந்திராவுக்கு ஆதரவாக சிலர், எத்னாலுக்கு ஆதரவாக சிலரும் குரல் கொடுத்து, குழப்பத்தை அதிகரிக்கின்றனர். வரும் நாட்களில் தாலுகா, மாவட்ட பஞ்சாயத்து தேர்தல், பெங்களூரு மாநகராட்சி தேர்தல் நடக்கவுள்ளன.
இந்த தேர்தல்கள் முடிந்த பின், அடுத்த சட்டசபை தேர்தலுக்கு தயாராக வேண்டும். ஆனால் பா.ஜ., தலைவர்கள் அதை பற்றி சிந்திக்காமல், கட்சியில் தங்கள் கொடி பறக்க வேண்டும் என, முட்டி மோதுகின்றனர். இவர்களின் செயலால் கட்சி தொய்வடைந்துள்ளது.
கோஷ்டி பூசலால் தொண்டர்களும் வருத்தம் அடைந்துள்ளனர். முன்னின்று தங்களை வழி நடத்த நடத்த வேண்டிய தலைவர்கள், பதவிக்காக முட்டி மோதுவது சரியா.
கட்சி முக்கியம் இல்லையா என, கேள்வி எழுப்புகின்றனர். கட்சி மேலிடம் தலையிட்டு, கோஷ்டி பூசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் கட்சிக்கு எதிர்காலம் இருக்காது.
'லட்டு போன்று, அரசுக்கு எதிரான பல அஸ்திரங்கள் கைக்கு கிடைத்தும், அவற்றை கீழே போட்டு வீணாக்குகின்றனர். இனியாவது விழித்து கொள்ளுங்கள்' என, தொண்டர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது டில்லி சட்டசபை தேர்தலில், மேலிட தலைவர்கள் பரபரப்பாக உள்ளனர். தேர்தல் முடிந்த பின், கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை மேலிடம் சரி செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது - நமது நிருபர் -.