மஹாராஷ்டிராவில் தனிப்பெரும் கட்சியாக பா.ஜ.,அபாரம்
மஹாராஷ்டிராவில் தனிப்பெரும் கட்சியாக பா.ஜ.,அபாரம்
UPDATED : நவ 24, 2024 01:53 AM
ADDED : நவ 23, 2024 11:47 PM

மும்பை: மஹாராஷ்டிரா தேர்தல் வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவுக்கு மாபெரும் வெற்றி பெற்று, பா.ஜ., தலைமையிலான மஹாயுதி கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதில், தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களில் பா.ஜ., அபார வெற்றி பெற்றுள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பா.ஜ., மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை அடங்கிய மஹாயுதி கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக சமீபத்தில் தேர்தல் நடந்தது.
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுடன், மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலிலும் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன.
அதிக இடங்கள்
இந்நிலையில், நேற்று வெளியான முடிவுகளில், பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில், மஹாயுதி கூட்டணி 234 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதில், பா.ஜ., மட்டும் 132 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது.
சிவசேனா 57, மற்றும் தேசியவாத காங்., 41 இடங்களில் வென்றன. இந்த தேர்தலில், 149 தொகுதிகளில் பா.ஜ., வேட்பாளர்களை நிறுத்தியது.
மஹா விகாஸ் அகாடி கூட்டணியில், உத்தவ் தாக்கரே கட்சி 20, காங்., 16, சரத் பவார் கட்சி 10 இடங்களில் வென்றுள்ளன. இந்தக் கூட்டணி ஒட்டுமொத்தமாக, 50 இடங்களில் கூட வெற்றி பெறவில்லை.
மஹாராஷ்டிரா அரசியல் மிகவும் அலாதியானது. காங்கிரசின் வலுவான கோட்டையான இங்கு, 1990களில், பால் தாக்கரேயின் சிவசேனா அதை மாற்றிக் காட்டியது. கடந்த 1995ல் சிவசேனா ஆட்சியைப் பிடித்தது. சிவசேனாவின் கூட்டணி கட்சியாக பா.ஜ., இருந்தது.
ஆனால், இந்த நிலை 2014ல் தலைகீழாக மாறியது. அந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில், கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜ., அதிக இடங்களை பிடித்தது.
தொடர்ந்து நடந்த சட்டசபை தேர்தலில் இந்த கூட்டணி வென்றது. பா.ஜ., அதிக இடங்களில் வென்றதால், மஹாராஷ்டிராவில் பா.ஜ., ஆட்சி முதல் முறையாக அமைந்தது. தேவேந்திர பட்னவிஸ் முதல்வரானார்.
கடந்த 2019 சட்டசபை தேர்தலிலும், இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்தன. ஆனால், முதல்வர் பதவி கேட்டு, சிவசேனாவின் தலைவரான உத்தவ் தாக்கரே முரண்டு பிடித்தார்.
இதனால் ஆட்சி அமைக்க முடியாமல், 11 நாட்கள் ஜனாதிபதி ஆட்சிக்கு உத்தரவிடப்பட்டது.
![]() |
போர்க்கொடி
இதையடுத்து, பல அரசியல் காட்சிகள் அரங்கேறின. தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகனான அஜித் பவார், திடீரென பா.ஜ.,வுக்கு ஆதரவு அளித்தார்.
தேவேந்திர பட்னவிஸ் முதல்வராகவும், அஜித்பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். ஆனால், தான் எதிர்பார்த்தபடி, தேசியவாத காங்.,கைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களை இழுக்க முடியாமல் அஜித் பவார் திணறினார். இதையடுத்து, ஐந்து நாட்களில் இந்த ஆட்சி கலைக்கப்பட்டது.
திடீர் திருப்பமாக, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகியவை, உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவு அளிக்க, அவருடைய
![]() |
தலைமையில், மஹா விகாஸ் அகாடி கூட்டணி அரசு அமைந்தது.
இரண்டரை ஆண்டுகள் ஆட்சி நடந்து வந்த நிலையில், சிவசேனாவில் குழப்பம் ஏற்பட்டது. ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கினர். இதையடுத்து, 2022 ஜூனில், சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பெரும்பான்மையை நிரூபிக்காமல் உத்தவ் தாக்கரே விலகினார்.
ஏக்நாத் ஷிண்டேவுக்கு பா.ஜ., ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து அவர் முதல்வரானார்; தேவேந்திர பட்னவிஸ் துணை முதல்வரானார். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுக்கு, தேர்தல் கமிஷன் அங்கீகாரம் அளித்தது.
இந்நிலையில், அஜித் பவாரும் சிவசேனா - பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து அரசில் இணைந்தார். அவருக்கு துணை முதல்வரும், அவருடைய ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவிகளும் வழங்கப்பட்டன. இதையடுத்து தேசியவாத காங்.,கும் உடைந்தது. அஜித் பவார் தலைமையிலான கட்சிக்கு, தேர்தல் கமிஷன் அங்கீகாரம் அளித்தது.
கடந்த ஏப்ரலில் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்., ஆகியவை அடங்கிய மஹாயுதி கூட்டணியைவிட, காங்கிரஸ் - தேசியவாத காங்., - சரத் பவார் பிரிவு - சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு அடங்கிய மஹா விகாஸ் அகாடி அதிக இடங்களில் வென்றது.
இந்த சூழ்நிலையில், சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள், மஹாயுதி கூட்டணி வெற்றி பெறும் என்று கூறின. அதேநேரம், மஹா விகாஸ் அகாடி கடும் போட்டியைக் கொடுக்கும் என்றும் கூறின.
இந்த கணிப்புகளை மீறி, மஹாராஷ்டிரா தேர்தல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரும் வெற்றியை, பா.ஜ., கூட்டணியும், தனிப்பட்ட முறையில் பா.ஜ.,வும் பெற்றுள்ளன. கூட்டணியில் அதிக இடங்களில் வென்றுள்ளதால், பா.ஜ.,வுக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்றும், தேவேந்திர பட்னவிஸ் அதற்கு தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்த வெற்றியின் வாயிலாக, பா.ஜ., தலைமையிலான கூட்டணி மஹாராஷ்டிராவில் தொடர்ந்து மூன்று முறை சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.
மக்கள் முடிவு அல்ல!
இந்த முடிவுகள் மஹாராஷ்டிராமக்களின் முடிவாக இருக்காது. அவர்கள் என்ன விரும்புகின்றனர் என்பது எங்களுக்கு தெரியும். இந்த தேர்தலுக்கு பணம் பயன்படுத்தப்பட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏக்நாத் ஷிண்டேவின் அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் மீண்டும் எப்படி வெற்றி பெற முடியும்? மஹாராஷ்டிரா மக்களுக்கு துரோகம் செய்த அஜித் பவாரின் ஆதரவாளர்கள் எப்படி வெற்றி பெற்றனர்? இதில் ஏதோ சதி நடந்துள்ளது.
- சஞ்சய் ராவத்,எம்.பி., - சிவசேனா, உத்தவ் அணி



