ADDED : ஜன 31, 2024 07:36 AM
கன்னடம், மராத்தி மொழி சர்ச்சைகளால் எப்போதும் செய்திகள் வந்து கொண்டிருக்கும் பெலகாவி லோக்சபா தொகுதியில், பா.ஜ,. - காங்கிரஸ் இடையே சீட் கேட்போரின் 'லிஸ்ட்' நீண்டு கொண்டே செல்கிறது.
பெலகாவி லோக்சபா பா.ஜ., - எம்.பி.,யும், மத்திய அமைச்சராகவும் இருந்த சுரேஷ் அங்கடி மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில், அவரது மனைவி மங்களா வெற்றி பெற்று, எம்.பி.,யாக உள்ளார்.
இதுவரை நடந்த 14 லோக்சபா பொதுத்தேர்தல், ஒரு இடைத்தேர்தலில், 12 முறை காங்கிரஸ் வாகை சூடியுள்ளது. இத்தொகுதி, 1957 முதல் 1991 வரை காங்கிரசின் கோட்டையாக இருந்தது. ஆனால், 1996ல் ஜனதா தள அலையில், அக்கட்சியின் சிவானந்த கவுஜல்கி வெற்றி பெற்றார்.
இதன் பின், 2004 முதல் பா.ஜ., கோட்டையாக மாறிவிட்டது. 2009, 2014, 2019 என பா.ஜ., கோலோச்சி வருகிறது. அக்கட்சியின் சுரேஷ் அங்கடி தொடர்ந்து நான்கு முறை வென்றார். அவரது மரணத்துக்கு பின் நடந்த இடைத்தேர்தலில், அவரது மனைவி மங்களா, தொகுதியை கைப்பற்றினார்.
ஜாதி அடிப்படையிலான கணக்கீடுகளின் அடிப்படையில் தான் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இங்கு, லிங்காயத், மராத்தியர் தான் வெற்றி வாய்ப்பை நிர்ணயிப்பர். இதனால் வலுவான லிங்காயத் தலைவர்களை களமிறக்குவது வழக்கம்.
ஆனால், இம்முறை ஜாதி அடிப்படையில் டிக்கெட் வினியோகம் சுலபமாக இருக்காது என, கருத்து பரவலாக உள்ளது.
பா.ஜ., காங்கிரசில் சீட்டுக்கு போட்டி வலுவாக உள்ளது. ஏனெனில் கடந்த சட்டசபை தேர்தலின்போது, கட்சியின் பலம் தலைகீழானது. வலுவாக இருந்த பா.ஜ., பலத்தை இழந்தது; இந்த பலத்தை காங்கிரஸ் அறுவடை செய்தது.
காங்கிரஸ்
காங்கிரசில் மராத்தி சமூகத்தை விட, லிங்காயத், குருபா சமூகத்தினரிடம் இருந்து சீட்டுக்கு அதிக போட்டி நிலவுகிறது. மாவட்ட பொறுப்பாளர் சதீஷ் ஜார்கிஹோளியின் ஆதரவாளர்கள் கிரண் சதுனவரா, டாக்டர் கிரிஷ் சோனாவால்கர் முன்னணியில் உள்ளனர். மாவட்ட தலைவர் வினயா நாவலகட்டியும், சீட்டுக்காக திரைமறைவில் முயற்சித்து வருகிறார்.
இதே தொகுதியில் ஒருமுறை எம்.பி.,யாக இருந்த காங்கிரசின் அமர்சிங் பாட்டீல் மீண்டும், மேலிடம் அளவில் முயற்சித்து வருகிறார்.
பா.ஜ.,
பா.ஜ.,வுக்குள் நினைத்து கூட பார்க்க முடியாத அளவில் அதிருப்தி நிலவுகிறது. யாரும் வெளிப்படையாக காட்டிக் கொள்வதில்லை. முக்கியமாக, சட்டசபை தேர்தல் தோல்வியால் கடுமையாக பாதித்து உள்ளது. இது தொடர்பாக சுய பரிசோதனை கூட்டம் நடத்தியும் பயனில்லை.
லோக்சபா தேர்தலில் போட்டியிட ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஹிரேமத், சீட் பெறுவதில் ஆர்வமாக உள்ளார். கொரோனா நேரத்தில் சிறப்பாக செயல்பட்டு மேலிடத்தின் கவனத்தை ஈர்த்தவர். இவரின் உழைப்பில் பா.ஜ., தலைவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இவர் மட்டுமின்றி தற்போதைய எம்.பி., மங்களா அங்கடி அல்லது அவரது மகள் ஸ்ரத்தா, முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், ராஜ்யசபா எம்.பி., ஈரண்ணா கடாடி, எம்.எல்.ஏ., பாலசந்திர ஜார்கிஹோளி, முன்னாள் எம்.எல்.சி., மகாந்தேஷ் கவுடகிமத், முன்னாள் எம்.எல்.ஏ., சஞ்சய் பாட்டீல், சங்கர் கவுடா பாட்டீல் ஆகியோர் பெயர்களும் அடிபடுகின்றன. மாவட்டத்தில் இருந்தும், இல்லாததை போல் உள்ள ம.ஜ.த., --- பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்துள்ளது. இது எந்த அளவு பலம் கொடுக்கும் என்பது போகப் போக தான் தெரியும்.
- நமது நிருபர் -