பஞ்சாப் முதல்வரிடம் செயல்பாடு இல்லை பா.ஜ., தலைவர் குற்றச்சாட்டு
பஞ்சாப் முதல்வரிடம் செயல்பாடு இல்லை பா.ஜ., தலைவர் குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 14, 2025 07:03 PM

லூதியானா:“ஊழல் மற்றும் போதைப்பொருளை ஒழிப்பதாக கூறும் முதல்வர் பகவந்த் மான் செயலில் எதுவும் இல்லை,” பஞ்சாப் மாநில பா.ஜ., தலைவர் சுனில் ஜாக்கர் கூறினார்.
பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு தொகுதி இடைத்தேர்தல் வரும்,19ம் தேதி நடக்கிறது. ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ., இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தேர்தல் பிரசாரம் அனல் பறக்கும் நிலையில், பஞ்சாப் மாநில பா.ஜ., தலைவர் சுனில் ஜாக்கர், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
ஊழல் செய்தவர்களின் கோப்புகள் தன்னிடம் இருப்பதாக முதல்வர் பகவந்த் மான் கூறினார்.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தாசில்தார் உள்ளிட்ட சில அதிகாரிகளை மட்டும் குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உண்மையிலேயே ஆதாரங்கள் இருந்தால், கட்சித் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், அதை ஆம் ஆத்மி கட்சியில் இருந்தே துவக்க வேண்டியிருக்கும்.
லுாதியானா மேற்கு தொகுதி வாக்காளர்கள் இந்த இடைத்தேர்தலில் நன்றாக யோசித்து ஓட்டுப் போட வேண்டும். பஞ்சாப் மக்களை ஆம் ஆத்மி முட்டாளாக்கப் பார்க்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பஞ்சாப் மாநில அரசியல் தலைவர்களின் வருமானம் குறித்து வருமான வரித்துறை விசாரணை நடத்த வேண்டும் என மாநில நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா சமீபத்தில் கூறியிருந்தார்.
லுாதியானா மேற்கு தொகுதி இடைத்தேர்தலில், பா.ஜ., - ஜீவன் குப்தா, ஆம் ஆத்மி - ராஜ்யசபா எம்.பி., சஞ்சீவ் அரோரா, காங்கிரஸ் - முன்னாள் அமைச்சர் பாரத் பூஷன் ஆஷு போட்டியிடுகின்றனர்.