ADDED : நவ 21, 2024 01:59 AM
கோல்கட்டா, மேற்கு வங்கத்தில், சமீபத்தில் மதக்கலவரம் ஏற்பட்ட பெல்டங்கா பகுதிக்குச் செல்ல முயன்ற பா.ஜ., மாநில தலைவர் சுகந்த மஜும்தார் வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு நேற்று கைது செய்யப்பட்டார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு உள்ள முர்ஷிதாபாத் மாவட்டம், பெல்டங்கா பகுதியில் கடந்த 16ம் தேதி இரு மதத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கடைகள், வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இதையடுத்து, பெல்டங்காவில் வன்முறை சம்பவத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது.
மீண்டும் அமைதியை ஏற்படுத்த அப்பகுதியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பா.ஜ., திரிணமுல் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் கலவரத்தில் காயமடைந்தவர்களை பார்ப்பதற்காகவும், கலவரம் நடந்த பகுதியின் தற்போதைய நிலை குறித்து அறிவதற்காகவும் பா.ஜ., மாநில தலைவர் சுகந்த மஜும்தார் நேற்று பெல்டங்காவுக்கு புறப்பட்டார்.
இதையறிந்த போலீசார், அவரை 70 கி.மீ.,க்கு முன்னர் கிருஷ்ணா நகரில் பெரிய படையுடன் சென்று தடுத்து நிறுத்தினர். திரும்பிச் செல்லும் படி பணித்தனர். அதற்கு மறுப்பு தெரிவித்த மஜும்தார் பெல்டங்காவுக்கு செல்ல முயன்றார். அவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர்.
இதை கண்டித்து பா.ஜ.,வினர் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

