சென்னப்பட்டணா காங்., வெற்றிக்கு பா.ஜ., தலைவர்கள் காரணம்: சிவகுமார்
சென்னப்பட்டணா காங்., வெற்றிக்கு பா.ஜ., தலைவர்கள் காரணம்: சிவகுமார்
ADDED : நவ 24, 2024 10:55 PM
ராம்நகர்: ''சென்னப்பட்டணாவில் காங்கிரஸ் வெற்றி பெற பா.ஜ., -- ம.ஜ.த., தலைவர்களும் காரணம்,'' என, துணை முதல்வர் சிவகுமார் கூறினார்.
சென்னப்பட்டணாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், சென்னப்பட்டணாவில் காங்கிரஸ் வேட்பாளர் 15,000 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். லோக்சபா தேர்தலில் 85,000 ஓட்டுகள் கிடைத்தது. இது, எங்களுக்கு நம்பிக்கையை அதிகரித்தது.
குமாரசாமி ராஜினாமா செய்த பின், சென்னப்பட்டணா தொகுதியில் மக்கள் குறைதீர் கூட்டங்களை நடத்தினேன். பல்வேறு பிரச்னைகள் இருப்பதாக, மக்கள் என்னிடம் மனு அளித்தனர்.
உங்கள் கஷ்டங்களை போக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தேன். அதற்கு இப்போது பலன் கிடைத்துள்ளது. நான் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும்.
சென்னப்பட்டணாவில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து, விரைவில் ராம்நகர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் ராமலிங்க ரெட்டி, யோகேஸ்வருடன் ஆலோசனை நடத்துவேன். யோகேஸ்வருக்கு என்று சென்னப்பட்டணாவில் ரசிகர் கூட்டம் உள்ளது. அவர் நிறைய வளர்ச்சி பணிகள் செய்துள்ளார்.
நாங்கள் சதி செய்து, நிகில் குமாரசாமியை தோற்கடித்து விட்டதாக கூறுகின்றனர். அப்படி என்றால் பெங்களூரு ரூரலில் சுரேஷை, சதி செய்து குமாரசாமி தோற்கடிக்கவில்லையா. வாய்க்கு வந்தபடி பேசுவதை, முதலில் அவர் நிறுத்த வேண்டும்.
பா.ஜ., -- ம.ஜ.த., கூட்டணி வைத்திருப்பது அக்கட்சியின் சில தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் இரு கட்சித் தலைவர்களும் யோகேஸ்வரை ஆதரித்தனர். இதுவும் சென்னப்பட்டணாவில் நாங்கள் வெற்றி பெற காரணம்.
சென்னப்பட்டணாவில் வெற்றி பெற்றதால் எனக்கு முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்று இல்லை. முதல்வர் பதவி குறித்து எல்லோரும் அவரவர் கருத்துகளை தெரிவிக்கின்றனர். அது பற்றி பேசாமல் இருப்பது நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.