தீபாவளிக்கு களைகட்டிய 'டாஸ்மாக்' கடைகள்; ரூ.790 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை
தீபாவளிக்கு களைகட்டிய 'டாஸ்மாக்' கடைகள்; ரூ.790 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை
ADDED : அக் 22, 2025 01:38 AM

சென்னை: தீபாவளியை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளில், 'குடி'மகன்கள் மது வகைகளை அதிகம் வாங்கியதால், மது விற்பனை களைகட்டியது. தீபாவளி, அதற்கு முந்தைய இரு நாட்கள் என, மூன்று நாட்களில், 790 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபான வகைகள் விற்பனையாகி உள்ளன.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,787 சில்லரை கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மது வகைகளை விற்கிறது. இந்த கடைகளில், தினமும் சராரியாக, 150 கோடி ரூபாய்க்கும், வார விடுமுறை மற்றும் விசேஷ விடுமுறை நாட்களில், அதை விட அதிகமாகவும், மதுபானங்கள் விற்பனையாகின்றன.
இம்மாதம், 20ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட்டது. இதற்காக, அரசு, தனியார் நிறுவனங்கள், பணியாளர்களுக்கு போனஸ் வழங்கின.
பலரிடமும், பணப்புழக்கம் அதிகம் இருந்ததால், 'குடி'மகன்கள் தீபாவளியை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாட, கடந்த சனிக்கிழமை முதல், வழக்கத்தை விட கூடுதலாக மது வகைகளை வாங்கியபடி இருந்தனர்.
இதனால், தீபாவளி வரை டாஸ்மாக் கடைகளில், மதியம் 12:00 மணிக்கு திறந்தது முதல், இரவு 10:00 மணிக்கு மூடப்பட்டது வரை, 'குடி'மகன்கள் கூட்டம் அலைமோதியதால், மது விற்பனை களைகட்டியது.
இதையடுத்து, கடந்த, 18ல், 230.66 கோடி; 19ல், 293.73 கோடி; 20ல், 266.06 கோடி ரூபாய் என, மூன்று நாட்களில் மட்டும், 789.85 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.
இதில், சென்னை மண்டலத்தில், 158 கோடி; திருச்சி, 157 கோடி; சேலம், 153 கோடி; மதுரை, 171 கோடி; கோவை மண்டலத்தில், 150 கோடி ரூபாயாக இருந்தது.
கடந்த ஆண்டு, தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய இரு நாட்களில் மது விற்பனை, 650 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, 140 கோடி ரூபாய்க்கு, மதுபானங்கள் கூடுதலாக விற்பனையாகி உள்ளன.