கடந்த காலத்தை பற்றி மட்டும் பேசும் பாஜ தலைவர்கள்: பிரியங்கா குற்றச்சாட்டு
கடந்த காலத்தை பற்றி மட்டும் பேசும் பாஜ தலைவர்கள்: பிரியங்கா குற்றச்சாட்டு
ADDED : நவ 01, 2025 05:30 PM

பெகுசராய்: '' பிரதமர், உள்துறை அமைச்சர் உட்பட பாஜ மூத்த தலைவர்கள் கடந்த காலத்தை பற்றி மட்டுமே பேசுகின்றனர். நிகழ்காலம் அல்லது எதிர்காலத்தை பற்றி பேசவில்லை,'' காங்கிரஸ் எம்பி பிரியங்கா குற்றம்சாட்டியுள்ளார்.
பீஹார் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக நவ.,6 மற்றும் 11ல் தேர்தல் நடக்கிறது. இதனையடுத்து அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
பெகுசராய் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்கா பேசியதாவது: உங்களின் இந்த நிலம் மிக அழகானது. புனிதமானது. இங்கிருந்து தான் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மஹாத்மா காந்தி போராட்டத்தை துவக்கினார். சிறந்த அதிகாரிகள், தலைவர்கள், அரசியல்வாதிகள், கவிஞர்களை இப்பகுதி கொடுத்துள்ளது. ஆனால், இப்பகுதி இன்னும் முறையாக வளர்ச்சி காணவில்லை. அரசியலமைப்புக்காக மஹாத்மா காந்தி போராட்டத்தை துவக்கினார். அது தான் நமக்கு சுதந்திரம், வளர்ச்சி,உரிமை, ஓட்டுரிமை என்ற மிகப்பெரிய உரிமையை கொடுத்தது. அது தான் உங்களை இந்த நாட்டின் குடிமகனாக மாற்றியது.
பாஜ மக்களை பலவீனப்படுத்தி வருகிறது. உங்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு கிடைக்கும் அரசின் திட்டங்கள் மற்றும் பலன்கள் குறைந்துள்ளது. மத்திய மாநில அரசுகள் வேலைவாய்ப்பை வழங்க தவறிவிட்டதால் தான், கேரளா முதல் காஷ்மீர் வரை பல்வேறு மாநிலங்களில் பீஹார் மக்கள் வேலைபார்ப்பதை பார்க்க முடிகிறது.
பிரதமர், உள்துறை அமைச்சர், முதல்வர்கள் உட்பட பாஜ மூத்த தலைவர்கள் முன்னாள் பிரதமர் நேரு பற்றி பேசுகின்றனர். ஆனால், அவர்கள் எதிர்காலம் பற்றி பேசுகின்றனரா? 'நேரு இதனை அழித்துவிட்டார்'. 'இந்திரா அதனை அழித்துவிட்டார்' என்கின்றனர். ஆனால், நிகழ்காலத்தை பற்றி பேசுகின்றனரா? பணவீக்கத்தால் நீங்கள் எப்படி பாதிக்கின்றீர்கள் என பேசுகின்றனரா? இவ்வாறு பிரியங்கா பேசினார்.

