திரிசூல் பயிற்சியில் இந்திய முப்படைகள்; வெளியான 'திகில்' வீடியோ வைரல்
திரிசூல் பயிற்சியில் இந்திய முப்படைகள்; வெளியான 'திகில்' வீடியோ வைரல்
ADDED : நவ 01, 2025 04:50 PM

புதுடில்லி: பாகிஸ்தானுடனான மேற்கு எல்லையில், இந்திய ராணுவம், இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படையை உள்ளடக்கிய முப்படை இராணுவப் பயிற்சியான திரிசூல் பயிற்சியை நடத்தி வருகின்றன. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
குஜராத்திற்கும், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கும் இடையே உள்ள கழிமுகம், 'சர் கிரீக்' என்று அழைக்கப்படுகிறது. இங்கு கடந்த அக்டோபர் 3ம் தேதி, முப்படைகளும் இணைந்து, 'திரிசூலம்' என்ற பெயரில் பயிற்சிகளை நடத்தி வருகிறது. இதனால் அப்பகுதியில் வான்வழி விமான போக்குவரத்தை நிறுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இந்த பயிற்சி வரும் நவம்பர் 10ம் தேதி வர நடைபெற உள்ளது.
முப்படைகளின் கூட்டு செயல்திறன், தன்னிறைவு இந்தியா மற்றும் ராணுவத்தின் நவீனத்துவம் ஆகியவற்றை வெளிப்படுத்துவதே இந்த பயிற்சியின் முக்கிய நோக்கம். 'திரிசூலம்' பயிற்சி நடந்து வரும் சர் கிரீக் பகுதி என்பது, குஜராத் மற்றும் பாகிஸ்தானின் சிந்து மாகாணம் இடையேயான, 96 கி.மீ., நீள சதுப்பு நிலம். இங்கு மக்கள் வசிக்கவில்லை. ஆனால், இந்திய கடற்பாதைகளுக்கு மிக முக்கியமான நுழைவு வாயில் என்பதால் இந்த பகுதி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
இந்நிலையில், திரிசூல் பயிற்சியின் வீடியோவை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.திரிசூல் பயிற்சி இந்திய ராணுவம், இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப்படை இடையே கூட்டு செயல்பாடுகளை எடுத்துரைக்கிறது. தன்னம்பிக்கை மற்றும் புதுமை ஆகியவற்றின் மூலம் அதன் எல்லைகளைப் பாதுகாப்பதற்கான இந்தியாவின் உறுதியை எடுத்துக்காட்டுகிறது.
போர்களைத் தடுத்து வெற்றிபெறும் திறன் கொண்ட, தொழில்நுட்ப ரீதியாக இயக்கப்படும் மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் படையை உருவாக்குவதில் இந்திய ஆயுதப் படைகளின் உறுதிப்பாட்டை திரிசூல் பயிற்சி மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
பீதியில் பாக்.,!
திரிசூல் பயிற்சி பாகிஸ்தானுக்கு ஒரு எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, 'சர் கிரீக்' பகுதிக்கு அருகில் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அங்கு பாகிஸ்தான் தனது ராணுவ உள்கட்டமைப்பை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.
பின்னர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார், துரதிர்ஷ்டவசமாக, பயங்கரவாத சதி திட்டம் ஏதும் நடத்த முயற்சித்தால் இந்தியாவிடம் இருந்து தக்க பதில் கிடைக்கும் என ராஜ்நாத் சிங் கூறியிருந்தார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 பேரை கொன்ற கொடிய பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா ஆப்பரேஷன் சிந்தூர் நடத்தி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்த சில நாட்களுக்குப் பிறகு, மேற்கு எல்லையில் இந்தப் பயிற்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

