ADDED : நவ 01, 2025 04:49 PM

புதுடில்லி: சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் போபண்ணா அறிவித்துள்ளார்.
இந்திய டென்னிஸ் வீரர்களில் மிகவும் அனுபவம் மிக்கவர் ரோகன் போபண்ணா . இவர் கலப்பு இரட்டையர் பிரிவில் தலைசிறந்து விளங்கினார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று வரும் இவர், தற்போது ஓய்வை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; குட் பை, ஆனால், இது முடிவல்ல. கனத்த இதயத்துடனும், நன்றியுடனும் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். உங்களின் வாழ்க்கையை ஒரு அர்த்தமுள்ளதாக மாற்றிய ஒன்றிற்கு எப்படி விடை கொடுக்க முடியும்? 20 ஆண்டுகள் டென்னிஸ் வாழ்க்கைக்கு தற்போது விடை கொடுக்கிறேன்.
டென்னிஸ் எனக்கு ஒரு விளையாட்டு மட்டுமல்ல. நான் உடைந்த போது வலிமையையும், உலகம் என்னை சந்தேகிக்கப்படும் போது நம்பிக்கையையும் கொடுத்த விளையாட்டு. ஒவ்வொரு முறையும் நான் மைதானத்திற்குள் நுழையும் போதும், எனக்கு விடாமுயற்சியையும், மீண்டு வருவதையும் கற்றுக் கொடுத்தது.
என் உள்மனதில் என்னால் முடியாது என்று சொல்லும் போது, மீண்டும் போராடு என்பதையும் கற்பித்தது. அனைத்திற்கு மேலாக, நான் யார் என்பதையும் நினைவூட்டியது, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கலப்பு இரட்டையர் பிரிவில், போபண்ணா இருமுறை கிரான்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். 2024ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் கிரான்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற போது, டென்னிஸ் உலகில் மிக அதிக வயதில் பட்டத்தை வென்றவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் சக இந்திய வீராங்கனை சானியா மிர்சாவுடன் சேர்ந்து கலப்பு இரட்டையர் பிரிவில் 4வது இடத்தை பிடித்தார். 2017ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபனில் கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.
45 வயதான இவர் தற்போது நடந்து வரும் பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் தொடரின் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

