மஹாராஷ்டிரா, ஜார்க்கண்டில் பா.ஜ.,வுக்கு சாதகம்! தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் தகவல்
மஹாராஷ்டிரா, ஜார்க்கண்டில் பா.ஜ.,வுக்கு சாதகம்! தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் தகவல்
UPDATED : நவ 21, 2024 03:45 PM
ADDED : நவ 20, 2024 07:02 PM

புதுடில்லி: மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, அமைதியான முறையில் நேற்று முடிந்தது. ஓட்டு எண்ணிக்கை, நாளை மறுதினம் நடக்க உள்ள நிலையில், இரு மாநிலங்களிலும், பா.ஜ.,வுக்கு சாதகமான முடிவுகள் வரும் என, தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மஹாராஷ்டிரா
மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, பா.ஜ., மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்., அடங்கிய, மஹாயுதி கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. மாநிலத்தில் உள்ள, 288 சட்டசபை தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.
காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்., பிரிவு மற்றும் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா பிரிவு ஆகியவை அடங்கிய மஹா விகாஸ் அகாடி கூட்டணி, பெரும் தெம்புடன் களமிறங்கியது.
லோக்சபா தேர்தலில், இந்தக் கூட்டணி அதிக இடங்களில் வென்றதால், பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
மேலும், சிவசேனா மற்றும் தேசியவாத காங்., கட்சிகள் பிளவுபட்டபின் நடைபெறும் முதல் சட்டசபை தேர்தல் என்பதால், தங்களுடைய செல்வாக்கை நிரூபிக்க இக்கட்சிகளின் தலைவர்கள் கடுமையான பிரசாரத்தில் ஈடுபட்டனர்.நேற்று ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது. இதில், 60 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
ஓட்டுப் பதிவுக்குப் பின் வெளியான கணிப்புகளில் பெரும்பாலானவை, மஹாயுதி கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறியுள்ளன. அதே நேரத்தில், மஹா விகாஸ் கூட்டணி அதிக இடங்களில் வென்று கடும் போட்டியை அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில், மஹாயுதி கூட்டணி, 48 சதவீத ஓட்டுகளுடன், 150 - 170 இடங்களில் வெற்றி பெறும் என, 'மேட்ரிஸ்' நிறுவனத்தின் கணிப்பு தெரிவிக்கிறது.
மஹா விகாஸ் அகாடி கூட்டணி, 42 சதவீத ஓட்டுகளுடன், 110 - 130 இடங்களில் வெற்றி பெறும் என, அது கூறியுள்ளது. மற்ற கட்சிகள், 10 சதவீத ஓட்டுகளுடன், 8 -- 10 இடங்களில் வெல்லும்.
'பீபுள்ஸ் பல்ஸ்' என்ற அமைப்பு, பா.ஜ., கூட்டணிக்கு 175 - 195 இடங்கள் கிடைக்கும் என்றும், காங்., கூட்டணிக்கு 85 - 112 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 7 - 12 இடங்களும் கிடைக்கும் என, கூறியுள்ளது.
இதுபோலவே, மற்ற அமைப்புகள் வெளியிட்டுள்ள கணிப்புகளும், பா.ஜ., தலைமையிலான மஹாயுதி கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும், காங்., தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வென்று, கடும் போட்டியை கொடுக்கும் என்றும் கூறியுள்ளன.
ஜார்க்கண்ட்
ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.மொத்தமுள்ள, 81 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது.கடந்த 13ம் தேதி 43 தொகுதிகளுக்கும், மீதமுள்ள 38 தொகுதிகளுக்கு நேற்றும் தேர்தல் நடந்தன. 68 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
ஆளும் 'இண்டி' கூட்டணிக்கு எதிராக, பா.ஜ., தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது. பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவை என்ற நிலையில், பா.ஜ., கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என, பெரும்பாலான தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் கூறுகின்றன.
'மேட்ரிஸ்' நிறுவனத்தின் கணிப்பின்படி, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 42 - 47 இடங்களிலும், இண்டி கூட்டணி, 25 - 30 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'பீபுள்ஸ் பல்ஸ்' நிறுவனம், பா.ஜ., கூட்டணிக்கு 44 - 53 இடங்களும், காங்.,கூட்டணிக்கு 25 - 37 இடங்களும் கிடைக்கும் என, கணித்துள்ளது.
அதே நேரத்தில், இண்டி கூட்டணி, 53 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என, 'ஆக்சிஸ் மை இண்டியா' நிறுவனத்தின் கணிப்பு கூறுகிறது. பா.ஜ.,வுக்கு 25 இடங்கள் கிடைக்கும் என, அது கூறியுள்ளது.