ADDED : டிச 13, 2024 05:10 AM
பெலகாவி: பஞ்சமசாலி சமூகத்தினர் மீது தடியடி நடத்தியது குறித்து விவாதிக்க அனுமதிக்காததால், சபாநாயகர் காதர் அறைக்கு சென்று, பா.ஜ., உறுப்பினர்கள் பிரச்னை செய்தனர்.
பஞ்சமசாலி சமூகத்தினர் மீது போலீஸ் தடியடி நடத்தியது குறித்து, சட்டசபையில் நேற்று விவாதம் நடந்தது. அப்போது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் விஜயானந்த் காசப்பனவர், 'போலீசார் மீது கல்வீசியது பஞ்சமசாலிகள் இல்லை. பா.ஜ.,வினர்' என்றார். இதனால் பா.ஜ., உறுப்பினர்கள் ஆவேசமாக பேசினர். கூச்சல், குழப்பம் நிலவியதால், அவையை ஒத்திவைத்து விட்டு சபாநாயகர் காதர் தனது அறைக்கு சென்றார்.
இதையடுத்து, அவரது அறைக்கு சென்ற எதிர்க்கட்சி தலைவர் அசோக், துணை தலைவர் அரவிந்த் பெல்லத், சுனில்குமார் உள்ளிட்டோர், சபாநாயகர் காதரிடம், 'நீங்கள் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறீர்கள். பஞ்சமசாலி விவகாரம் குறித்து, எங்களுக்கு பேச அனுமதி அளிக்காதது ஏன்' என்று பிரச்னை செய்தனர். அந்த அறையில் இருந்த மேஜையை தட்டினர்.
இதுபற்றி அறிந்த காங்கிரஸ் உறுப்பினர்களும் அங்கு சென்றனர். இரு கட்சியினர் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதால், என்ன செய்வது என்று தெரியாமல் மார்ஷல்கள் தவித்தனர். பின் ஒரு வழியாக அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.