முதல்வருக்கு எதிராக கருப்பு கொடி பா.ஜ., -- எம்.எல்.ஏ., அறிவிப்பு
முதல்வருக்கு எதிராக கருப்பு கொடி பா.ஜ., -- எம்.எல்.ஏ., அறிவிப்பு
ADDED : நவ 27, 2024 07:26 AM
துமகூரு: வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதால் முதல்வருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்த போவதாக, பா.ஜ., -- எம்.எல்.ஏ., சுரேஷ் கவுடா அறிவித்து உள்ளார்.
துமகூரு ரூரல் பா.ஜ., -- எம்.எல்.ஏ., சுரேஷ் கவுடா நேற்று அளித்த பேட்டி:
பா.ஜ., -- ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் உள்ள தொகுதிகளுக்கு வளர்ச்சிப் பணிகள் செய்ய நிதி ஒதுக்குவதில் அரசு பாரபட்சம் பார்க்கிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது.
டிசம்பர் 2ம் தேதி முதல்வர் சித்தராமையா துமகூருக்கு வருகை தருகிறார். அப்போது அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளது. அவர் வருகையின் போது, 'கோ பேக்' என்ற கோஷம் ஒலிக்கும். முதல்வர் சர்வாதிகாரி போன்று செயல்படுகிறார். வெறுப்பு, ஆணவ அரசியல் செய்கிறார்.
மூன்று தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று ஒட்டுமொத்த மாநிலத்தையும் வென்றது போல காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கின்றனர். ஆணவம் நீண்ட காலம் நீடிக்காது. வரும் நாட்களில் மக்கள் பதிலடி கொடுப்பர். காங்கிரஸ் கட்சியின் கடைசி முதல்வராக சித்தராமையா இருப்பார். பின், காங்கிரஸ் ஒருபோதும் ஆட்சிக்கு வராது.
இவ்வாறு அவர் கூறினார்.