சமூக வலைதளத்தில் போலி கணக்கு பா.ஜ., - எம்.பி., மனோஜ் திவாரி புகார்
சமூக வலைதளத்தில் போலி கணக்கு பா.ஜ., - எம்.பி., மனோஜ் திவாரி புகார்
ADDED : பிப் 01, 2026 03:45 AM

புதுடில்லி: 'தன் பெயர் மற்றும் போட்டோவை பயன்படுத்தி, சமூகவலைதளமான, 'பேஸ்புக்'கில் போலி கணக்கு துவக்கி தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் தகவல்களை பரப்புகின்றனர்' என, வடகிழக்கு டில்லி தொகுதி பா.ஜ., - எம்.பி., மனோஜ் குமார் திவாரி, போலீசில் புகார் செய்துள்ளார்.
இதுகுறித்து, சமூகவலைதளத்தில் மனோஜ் குமார் திவாரி வெளியிட்டுள்ள பதிவு:
சமூக வலைதளமான பேஸ்புக்கில் என் பெயர் மற்றும் படத்தை பயன்படுத்தி போலி கணக்கு துவக்கப்பட்டுள்ளது. அதில், என் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தவறான மற்றும் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வெளியிடப்படுகின்றன.
நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு விதிமுறைகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் என் பெயரில் வெளியாகியுள்ளது.
அந்தப் பதிவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதுகுறித்து, மந்திர் மார்க் சைபர் கிரைம் போலீசில், 22ம் தேதி புகார் செய்துள்ளேன்.
ஆனால் இப்போது வரை என் பெயரில் உள்ள போலி கணக்கு இயக்கத்தில் உள்ளது. அதை முடக்க நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் அதிகாரிகளிடம் வலியுறுத்தி இருக்கிறேன்.
மேலும், இந்த விஷமத்தனத்தை செய்தவரை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி கூறுகையில், “மனோஜ் குமார் திவாரி கொடுத்த புகார்படி, தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் பெயரில் போலி கணக்கு துவக்கி இயக்கி வரும் நபர் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்,” என்றார்.

