சொத்து வரி அதிகரிப்பு முதல்வருக்கு பா.ஜ., எதிர்ப்பு
சொத்து வரி அதிகரிப்பு முதல்வருக்கு பா.ஜ., எதிர்ப்பு
ADDED : மார் 16, 2024 06:22 AM
பெங்களூரு: 'பெங்களூரு மாநகராட்சியில், சொத்து வரியை உயர்த்தும் ஆலோசனையை கைவிட வேண்டும்' என, பெங்களூரு தெற்கு பா.ஜ., தலைவர் ரமேஷ் வலியுறுத்தினார்.
இதுகுறித்து முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாருக்கு அவர் எழுதிய கடிதம்:
பெங்களூரில் 16 லட்சம் குடியிருப்பு கட்டடங்கள், 1,10,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலை கட்டடங்கள், 3,856 ஐ.டி., நிறுவனங்கள், 102 பயோடெக் நிறுவனங்கள், 850க்கும் மேற்பட்ட நட்சத்திர ஹோட்டல்கள், 2,800க்கும் லாட்ஜுகள் உட்பட குடியிருப்புகள், வர்த்தக கட்டடங்கள் உள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
டில்லி, மும்பையை தவிர, நாட்டின் மற்ற முக்கிய நகரங்களில் இந்த அளவுக்கு வர்த்தக கட்டடங்கள் இல்லை. பெங்களூரு மாநகராட்சி வருவாய் பிரிவு அதிகாரிகளை, முக்கிய புள்ளிகள், அரசியல்வாதிகள், சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால், வர்த்தக கட்டடங்கள், குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தொழிற்சாலைகள் கட்டடங்களில் இருந்து, ஆண்டுக்கு குறைந்தபட்சம் 8,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான வரி வருவாய் வசூலிக்க முடியும்.
எனவே முதல்வர், பெங்களூரு நகரின் பொறுப்பு அமைச்சர்கள், மாநகராட்சியின் தலைமை கமிஷனர், நிர்வாக அதிகாரிகள், மாநகராட்சி வருவாய் பிரிவு அதிகாரிகளுக்கு, முழுமையான அதிகாரத்தை அளிக்க வேண்டும். அதிகமான வருவாய் வந்தால், வரியை அதிகரிக்க வேண்டிய அவசியம் இருக்காது.
கடந்த நான்கைந்து ஆண்டுகளாக, அனைத்து சொத்துகளின் விபரங்களை, வரைபடத்துடன் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பலமுறை அளித்துள்ளேன். வரியை உயர்த்தும் ஆலோசனையை கை விட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

