தேச துரோகிகளுக்கு எதிராக கோலாரில் பா.ஜ., போராட்டம்
தேச துரோகிகளுக்கு எதிராக கோலாரில் பா.ஜ., போராட்டம்
ADDED : மார் 07, 2024 03:55 AM

கோலார், தேச துரோகிகளுக்கு எதிராகவும், பெங்களூரு விதான் சவுதா வளாகத்தில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என கோஷமிட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் கோலார் நகரின் 'டூம் லைட்' சதுக்கத்தில் நேற்று பா.ஜ.,வினர் தர்ணா செய்தனர்.
அப்போது கோலார் மாவட்ட பா.ஜ., துணைத் தலைவர் கமல் நாதன் பேசியதாவது:
இந்தியர்கள் அனைவருக்கும் தேசப் பக்தி ரத்தத்தில் கலந்தது. தேச துரோகிகளை ஒருபோதும் மன்னிக்கக் கூடாது. நாட்டில் பயங்கரவாதத்தை ஒரு போதும் ஏற்க முடியாது.
தேசியத்தின் வளர்ச்சியிலும், பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதிலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. நாட்டை சீர்குலைக்கும் செயலை, யார் செய்ய முனைந்தாலும், சட்டம் வேடிக்கை பார்க்கக் கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
விதான் சவுதா வளாகத்தில், 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷமிட்டவர்களை தாமதிக்காமல் கைது செய்ய வேண்டும்; 'ராமேஸ்வரம் கபே' ஹோட்டலில் வெடிகுண்டு வைத்த கும்பலை கைது செய்ய வேண்டும்; சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படுவதையும் கண்டித்தனர்.
மாவட்ட பா.ஜ., துணைத் தலைவர் ஜெயபிரகாஷ் நாயுடு, பொதுச் செயலர்கள் ஓம் சக்தி சலபதி, நைனா ரவி, விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் கோபால்ஜி, சிவண்ணா உட்பட பலர் பங்கேற்றனர்.

