பஞ்சாயத்து தேர்தலில் பஞ்சாயத்து... பதவியை உதறினார் பா.ஜ., தலைவர்!
பஞ்சாயத்து தேர்தலில் பஞ்சாயத்து... பதவியை உதறினார் பா.ஜ., தலைவர்!
UPDATED : செப் 27, 2024 11:38 AM
ADDED : செப் 27, 2024 11:34 AM

சண்டிகர்: பஞ்சாப் மாநில பா.ஜ., தலைவர் பதவியில் இருந்து சுனில் ஜாக்கர் திடீரென விலகி உள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் அடுத்த மாதம் 15ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த தேர்தலில், பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன.
இந் நிலையில் வேட்பு மனு தாக்கல் தேர்தல் ஆணையம் அறிவித்தபடி இன்று தொடங்க உள்ள நிலையில் பஞ்சாப் மாநில பா.ஜ., தலைவர் சுனில் ஜாக்கர் திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தையும் அவர் கட்சியின் தலைமைக்கு அனுப்பி வைத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பதவியில் இருந்து அவர் விலகிய முடிவு எடுத்ததற்கான பல காரணங்களை கட்சியினர் அடுக்குகின்றனர். கட்சியில் அவருக்கும், மற்றொரு முக்கிய பிரமுகரான ரவ்நீத் பிட்டுவுக்கும் இடையே எழுந்துள்ள மோதல்கள் முதன்மையான காரணமாக அவர்கள் கூறுகின்றனர்.
கட்சியின் ரவ்நீத் பிட்டுவுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் மற்றும் அங்கீகாரம் தமக்கு அளிக்கப்படுவதில்லை என்று சுனில் ஜாக்கர் கடும் அதிருப்தியில் இருந்துள்ளார். அதனை வெளிப்படுத்தும் விதமாக பஞ்சாயத்து தேர்தலை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கட்சிக் கூட்டத்தையும் அவர் அண்மையில் புறக்கணித்து இருந்தார். தொடர்ந்து கடும் அதிருப்தியில் இருந்த சுனில் ஜாக்கர், வேறு வழியின்றி ராஜினாமா செய்துவிட்டதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
சுனில் ஜாக்கர் நீண்ட அரசியல் பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்தவர். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தவர். இவரின் தந்தை மூத்த அரசியல்வாதி பல்ராம் ஜாக்கர். லோக்சபா சபாநாயகராக பணியாற்றியவர். கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் 329 நாட்கள் என நீண்ட காலம் சபாநாயகராக சேவை புரிந்தவர் என்ற பெயரை பெற்றவர். மத்திய பிரதேச கவர்னராகவும் இருந்தவர்.
2022ம் ஆண்டு மே 14ம் தேதி காங்கிரசில் இருந்த விலகிய சுனில் ஜாக்கர், அதே மாதம் 19ம் தேதி பா.ஜ.,வில் இணைந்தார். 2023ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி பஞ்சாப் மாநில பா.ஜ., தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.