இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.,
இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.,
ADDED : மார் 14, 2024 01:52 AM

புதுடில்லி, லோக்சபா தேர்தலில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை, ஆளும் பா.ஜ., நேற்று வெளியிட்டது. இதில், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, அனுராக் தாக்குர், பிரஹலாத் ஜோஷி, பியுஷ் கோயல் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
ஏப்., - மே மாதங்களில், 18வது லோக்சபாவை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் தேதி விரைவில் வெளியாக உள்ளது.
சமீபத்தில், உ.பி., - ம.பி., - கர்நாடகா, கேரளா, குஜராத் உள்ளிட்ட, 18 மாநிலங்களில், 195 தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் முதல் பட்டியலை, மத்தியில் ஆளும் பா.ஜ., வெளியிட்டது.
இதில், வாரணாசியில் பிரதமர் மோடி, குஜராத்தின் காந்தி நகரில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், லோக்சபா தேர்தலில் போட்டியிடும், 72 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாம் கட்ட பட்டியலை, பா.ஜ., நேற்று வெளியிட்டது.
இதன்படி, டில்லியில் 2; குஜராத்தில் 7; ஹரியானா 6; ஹிமாச்சல் 2; கர்நாடகா 20; ம.பி., 5; மஹாராஷ்டிரா 20; தெலுங்கானா 6; திரிபுரா 1 மற்றும் உத்தரகண்டில், 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும், யூனியன் பிரதேசமான, தாத்ரா - நாகர் ஹவேலி மற்றும் டாமன் - டையூவில், தாத்ரா - நாகர் ஹவேலி தொகுதிக்கான வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, தொடர்ந்து மூன்றாவது முறையாக, மஹாராஷ்டிராவின் நாக்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளார்.
தற்போது ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ள மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியுஷ் கோயல், மும்பை வடக்கு தொகுதியில் களமிறக்கப்பட்டு உள்ளார். ஹிமாச்சலின் ஹமிர்பூர் தொகுதியில், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் போட்டியிடுகிறார்.
கர்நாடகாவில், முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, ஹவேரி; மத்திய பார்லி., விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, தார்வாட்; பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா, பெங்களூரு தெற்கு தொகுதியிலும் களமிறங்குகின்றனர்.
ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் மருமகன் பிரபல டாக்டர் மஞ்சுநாத், பெங்களூரு ரூரல் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், ஹரியானா முதல்வர் பதவியை ராஜினாமா செய்த மனோகர் லால் கட்டார், கர்னால் தொகுதியில் களமிறக்கப்பட்டு உள்ளார். உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் ஹரித்வார் தொகுதியில் போட்டியிடுகிறார்.
முதல் வேட்பாளர் பட்டியலில், 195; இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில், 72 என, மொத்தம், 267 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை, பா.ஜ., இதுவரை அறிவித்துள்ளது.

