நேரு காலத்திலேயே சீன ஆக்கிரமிப்பு காங்., குற்றச்சாட்டுக்கு பா.ஜ., பதிலடி
நேரு காலத்திலேயே சீன ஆக்கிரமிப்பு காங்., குற்றச்சாட்டுக்கு பா.ஜ., பதிலடி
ADDED : ஜன 06, 2025 07:42 AM
புதுடில்லி :   நம் எல்லைக்குள் சீனா ஆக்கிரமிப்பு செய்வது குறித்து பிரதமர் மோடியை காங்கிரஸ் குற்றஞ்சாட்டிய நிலையில், 'நேரு காலத்திலேயே சீனாவின் அத்துமீறல் நடந்துள்ளது' என, பா.ஜ., பதிலடி தந்துள்ளது.
உரிமை கோரப்படும்
நம் நாட்டின் லடாக் யூனியன் பிரதேசத்தின் வடமேற்கில் அக்சாய் சின் நிலப்பகுதி உள்ளது. மத்திய அரசால் உரிமை கோரப்படும் இந்த பகுதி, தற்போது சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதேபோல், லடாக்கின் சில பகுதிகள் சீன ஆக்கிரமிப்பில் உள்ளன.
இங்கு, புதிதாக ஹியான் மற்றும் ஹீகான் கவுன்டி என்ற இரண்டு மாவட்டங்களை உருவாக்குவது தொடர்பான அறிவிப்பை, சீனா சமீபத்தில் வெளியிட்டது.
'நமக்கு சொந்தமான பகுதிகளை சீனா தொடர்ந்து ஆக்கிரமித்து வருகிறது. நம் பிரதமர் பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக உள்ளார்' என, சமூக வலைதளத்தில் விமர்சித்தது காங்கிரஸ்.
இதற்கு, பா.ஜ.,வின் தகவல் தொடர்பு பிரிவு தலைவர் அமித் மாள்வியா பதிலடி தந்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது:
முன்னாள் பிரதமர் நேரு காலத்தில் இருந்தே, எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு இருந்துள்ளது. கடந்த 1962ல், சீனா ஆக்கிரமித்த அக்சாய் சின் பகுதியின் புதிய பெயர் தான் ஹியான் கவுன்டி.
தகுதியில்லை
கடந்த 1957ல், சீனாவால் திறந்து வைக்கப்பட்ட ஜி - 219 நெடுஞ்சாலையில், இந்த ஹியான் கவுன்டி அமைந்துள்ளது.
இங்கு சீன கட்டுமானங்கள் நடந்ததை, 1959ல் பார்லி.,யில் நேரு ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த 1959ல் ஹாஜி லங்கார் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டது.
இதேபோல், 1962ல் கிசில் ஜில்கா மற்றும் சுங் தாஷ், 1961ல் டெஹ்ரா காம்பாஸ், 1959ல் ஷமல் லுங்பா உள்ளிட்ட பகுதிகள் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டன.
நேரு காலத்திலேயே இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் நிகழ்ந்த சூழலில், இந்த விவகாரத்தில் பிரதமரின் அணுகுமுறை குறித்து பேச காங்கிரசுக்கு தகுதியில்லை. ஆகையால், பா.ஜ., மீது பொய்பழி சுமத்தி காங்கிரசால் தப்பிக்க முடியாது.
இவ்வாறு கூறியுள்ளார்.

