ADDED : பிப் 16, 2025 10:38 PM

பெங்களூரு : பா.ஜ., மூத்த தலைவர் சிவராமேகவுடா, ஆம் ஆத்மி கட்சியின் பிரிஜேஷ் காலப்பா ஆகியோர், தங்கள் கட்சியில் இருந்து விலகி, துணை முதல்வர் சிவகுமார் முன்பு நேற்று காங்கிரசில் இணைந்தனர்.
பெங்களூரு சிவாஜிநகர் குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் பவனில், துணை முதல்வர் சிவகுமார் முன்னிலையில் பா.ஜ., மூத்த தலைவர் சிவராமே கவுடா, ஆம் ஆத்மி கட்சியின் பிரிஜேஷ் காலப்பா ஆகியோர் காங்கிரசில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிவகுமார் பேசியதாவது:
உள்ளாட்சி தேர்தலுக்கு நாம் அனைவரும் தயாராக வேண்டிய நேரம் வந்துவிட்டது. சிவராமே கவுடா காங்கிரசில் இணைய விருப்பம் தெரிவித்தார்.
தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து கட்சியில் இணைத்து உள்ளோம். பிரிஜேஷ் காலப்பா முன்பு, எங்கள் கட்சியில் இருந்தவர். ஆம் ஆத்மிக்கு சென்றார். தாய் கட்சிக்கு திரும்பி வர ஆசைப்பட்டார். அவரையும் கட்சியில் சேர்த்து கொண்டோம்.
காங்கிரசில் இணைபவர்கள் எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகமாக இருக்கும். காந்தியின் நினைவாக மாநிலத்தில் 100 காங்கிரஸ் அலுவலகங்களை கட்ட முடிவு செய்து உள்ளோம். கட்டுமான பணிகளுக்காக ஒரு குழுவை அமைத்து உள்ளோம். அவர்கள் அறிக்கை அளித்த பின், அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

