பா.ஜ., முன்னாள் கவுன்சிலர் கொலை ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை
பா.ஜ., முன்னாள் கவுன்சிலர் கொலை ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை
ADDED : ஜன 02, 2025 02:12 AM
பெங்களூரு கர்நாடகாவில், பா.ஜ.,வின் முன்னாள் கவுன்சிலர் ரேகா கதிரேஷ் கொலை வழக்கில், ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, பெங்களூரு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கர்நாடக மாநிலம், பெங்களூரு அஞ்சனப்பா கார்டனில் வசித்தவர் ரேகா கதிரேஷ், 45. மாநகராட்சியின் காட்டன்பேட் வார்டு பா.ஜ., முன்னாள் கவுன்சிலர். 2021ல் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தது. அப்போது ரேகா, தன் சொந்த செலவில் ஏழைகளுக்கு உணவு வழங்கினார்.
அதே ஆண்டு ஜூன் 24ம் தேதியன்று, கட்சி அலுவலகம் அருகில் ஏழைகளுக்கு உணவு வழங்கினார். அதன்பின் காரில் ஏற முற்பட்டபோது, மர்ம கும்பல் அவரை வழிமறித்து அரிவாள், இரும்புத்தடி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது.
இதுகுறித்து, போலீசார் விசாரணை நடத்தினர். பீட்டர், 46, சூர்யா என்ற சூரஜ், 20, ஸ்டீபன், 21, புருஷோத்தம், 22, அஜய், 21, செல்வராஜ் என்ற புதான், 36, மாலா, அவரது மகன் அருண்குமார், 36, ஆகிய எட்டு பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது:
கடந்த 2018ல் ரேகாவின் கணவர் கதிரேஷ் கொலை செய்யப்பட்டார். அதன்பின் ரேகா தனியாக வசித்தார். கணவரின் உறவினர்களை அருகில் சேர்க்காமல் ஒதுக்கிவைத்தார்.
இது கதிரேஷின் அக்கா மாலாவையும், அவரது குடும்பத்தினரையும் கோபப்படுத்தியது.
மாலாவும், அவரது மகன் அருண்குமாரும் ரேகாவை பழிவாங்க சதித் திட்டம் தீட்டினர். இவர்களுக்கு பீட்டர் உதவினார்.
கதிரேஷ் உயிருடன் இருந்தபோது, அவருடன் சுற்றிய பீட்டர், அவர் இறந்த பின் ரேகாவின் மெய்க்காவலராக இருந்தார். அவரையும் ரேகா ஒதுக்கியதால், கோபமடைந்து மாலாவுடன் சேர்ந்து, கூலிப்படையை ஏவி ரேகாவை கொலை செய்தது, விசாரணையில் தெரிந்தது.
இவ்வாறு போலீசார் கூறினார்.
இந்த வழக்கின் விசாரணையை முடித்த போலீசார், பெங்களூரு 72வது சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் 800க்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். நீதிமன்ற விசாரணை முடியும் முன்பே மாலா உயிரிழந்தார்.
விசாரணையில் மற்ற ஏழு பேரின் குற்றம் உறுதியானதால், அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து, நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

