முதல்வர் பதவியை காப்பாற்றிக் கொள்ள ரூ.300 கோடி வசூல்; சித்தராமையா மீது பாஜ பகீர் குற்றச்சாட்டு
முதல்வர் பதவியை காப்பாற்றிக் கொள்ள ரூ.300 கோடி வசூல்; சித்தராமையா மீது பாஜ பகீர் குற்றச்சாட்டு
ADDED : அக் 29, 2025 09:30 AM

பெங்களூரு: தமது முதல்வர் பதவியை காப்பாற்றிக் கொள்ளவும், பீஹார் தேர்தலுக்கு நிதி உதவி அளிக்கவும் அமைச்சர்களிடம் சித்தராமையா ரூ.300 கோடி வசூல் செய்ததாக பாஜ மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஸ்ரீராமுலு பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
கர்நாடகா முதல்வராக இருப்பவர் காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா. இவர் பதவி ஏற்றது முதல் உட்கட்சி மோதலால் தவித்து வருவதோடு, மூடா வீட்டுமனை ஒதுக்கீடு வழக்கிலும் பெரும் சிக்கலை சந்தித்து வருகிறார்.
மூடா வழக்கில் சித்தராமையாவின் ரூ.100 மதிப்பிலான சொத்துகளை முடக்கி உள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்து இருக்கிறது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களிடம் இருந்து கிட்டத்தட்ட ரூ.400 கோடி அளவிலான சொத்துகள் பறிமுதல் செய்துள்ளதாகவும் அமலாக்கத்துறை கூறி உள்ளது.
சித்தராமையாவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ள மூடா வழக்கு விசாரணை வேகம் எடுத்து வரும் சூழலில் முதல்வர் விரைவில் மாற்றம் என சொந்த கட்சிக்குள்ளே எழுப்பப்படும் குரல்களாலும் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறார்.
இந் நிலையில், சித்தராமையா மீது பாஜ மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஸ்ரீராமுலு புதிய குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தி உள்ளார். இதுகுறித்து நிருபர்களிடம் பேசுகையில், அமைச்சர்கள் அவர் விருந்து நிகழ்ச்சி ஒன்றுக்கு அழைத்துள்ளார். அதில் பீஹார் தேர்தலுக்கு நிதி அளிக்கவும், முதல்வர் நாற்காலியை காப்பாற்றிக் கொள்ளவும், அமைச்சர்களிடம் சித்தராமையா ரூ.300 கோடியை வசூலித்து உள்ளார்.
இவ்வாறு ஸ்ரீராமுலு கூறி இருக்கிறார்.
பாஜவின் மூத்த தலைவர் ஸ்ரீராமுலுவின் இந்த பகீர் குற்றச்சாட்டு, கர்நாடக மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. ஏற்கனவே உட்கட்சி மோதல், துணை முதல்வர் டி.கே.சிவகுமாருடன் கருத்து வேறுபாடு,மூடா வழக்கு என்று சிக்கி தவிக்கும் சித்தராமையாவுக்கு இந்த குற்றச்சாட்டு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

