ADDED : மார் 22, 2024 05:53 PM

புவனேஸ்வர்: ஒடிசாவில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் தனித்து களமிறங்க பா.ஜ., முடிவு செய்துள்ளது.
ஒடிசா சட்டசபைக்கு லோக்சபாவுடன் இணைந்து நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தை ஆளும் பிஜூ ஜனதா தளத்துடன் கூட்டணி அமைக்க பா.ஜ., பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், ஒடிசா மாநில பா.ஜ., தலைவர் மன்மோகன் சமால் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 4.5 கோடி ஒடிசா மக்களின் நம்பிக்கை மற்றும் லட்சியங்களை நிறைவேற்றவும், வளர்ந்த இந்தியா மற்றும் வளர்ந்த ஒடிசா என்ற இலக்கை அடைய பிரதமர் மோடி தலைமையில் 21 லோக்சபா மற்றும் 147 சட்டசபை தொகுதிகளில் பா.ஜ., தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும்.மத்திய அரசின் திட்டங்கள் மாநில மக்களிடம் சென்றடையவில்லை. இதனால், ஏழை சகோதரர் மற்றும் சகோதரிகள் பலன்பெறவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

