பா.ஜ.,வின் சதுரங்க விளையாட்டு காங்., திட்டம் 'தவிடு பொடி'
பா.ஜ.,வின் சதுரங்க விளையாட்டு காங்., திட்டம் 'தவிடு பொடி'
ADDED : மார் 16, 2024 10:50 PM
உடுப்பி - சிக்கமகளூரு தொகுதியில், பா.ஜ.,வின் அரசியல் சதுரங்க விளையாட்டால், காங்கிரசின் திட்டம் தலைகீழானது. புதிய வேட்பாளரை தேட வேண்டிய கட்டாயத்துக்கு, காங்., ஆளாகியுள்ளது.
கர்நாடக காங்கிரஸ், லோக்சபா தேர்தலுக்கு விறுவிறுப்பாக தயாராகிறது. ஏழு தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியாமல், தலையை பிய்த்துக்கொள்கிறது.
பெங்களூரு ரூரல்
காங்கிரஸ் வசமுள்ள ஒரே லோக்சபா தொகுதியான பெங்களூரு ரூரல் மீது, பா.ஜ., 'கண்' வைத்துள்ளது. அதே போன்று பா.ஜ.,விடம் உள்ள லோக்சபா தொகுதிகளை தட்டிப்பறிக்க, காங்கிரஸ் ஒற்றைக்காலில் நிற்கிறது. ஒவ்வொரு தொகுதியிலும் திறன் வாய்ந்த வேட்பாளர்களை களமிறக்க முயற்சிக்கிறது.
உடுப்பி - சிக்கமகளூரு தொகுதியில், மத்திய அமைச்சர் ஷோபாவுக்கு சீட் கிடைக்கலாம் என, காங்கிரஸ் எதிர்பார்த்தது. தொகுதியில் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. அவர் வெற்றி பெறுவது எளிதல்ல என, நினைத்த காங்., தலைவர்கள், ஜெயபிரகாஷ் ஹெக்டேவை கட்சிக்கு அழைத்து வந்தனர். அவரை களமிறக்க திட்டமிட்டிருந்தனர்.
டென்ஷன்
ஆனால் ஷோபாவை, பெங்களூரு வடக்கு தொகுதிக்கு இடம் மாற்றிய பா.ஜ., மேலிடம், உடுப்பி - சிக்கமகளூரில் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த கோட்டா சீனிவாச பூஜாரியை களமிறக்கி உள்ளது. இது காங்கிரசின் டென்ஷனை அதிகரித்துள்ளது. புதிய வேட்பாளரை தேட வேண்டிய கட்டாயத்தில் சிக்கியுள்ளது.
ஜெயபிரகாஷ் ஹெக்டேவுக்கு சீட் கொடுப்பதா அல்லது முன்னாள் எம்.பி., வினய்குமார் சூரகேவை களமிறக்குவதா என ஆலோசித்து வருகிறது. இத்தொகுதியில், சுதிர்குமார் மரொள்ளி, அம்ஷுமந்த் உட்பட வேறு சிலரும் சீட் எதிர்பார்க்கின்றனர்.
இதற்கு முன்பு ஜெயபிரகாஷ் ஹெக்டேவின் பெயரை மட்டும், மேலிடத்துக்கு சிபாரிசு செய்ய, மாநில காங்., தலைமை நினைத்திருந்தது. பா.ஜ.,வின் வேட்பாளர் மாறியதால், காங்., திட்டம் தலைகீழானது.
சிக்கமகளூரின் நான்கு சட்டசபை தொகுதிகளில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்களிடம் கருத்து கேட்டறிந்து, வேட்பாளரை தேர்வு செய்ய, தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்- நமது நிருபர் -.

