'கிராந்திவீரா பிரிகேட்' துவக்குகிறார் பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா
'கிராந்திவீரா பிரிகேட்' துவக்குகிறார் பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா
ADDED : நவ 17, 2024 11:14 PM

விஜயபுரா: 'ராயண்ணா பிரிகேட்' என்ற அமைப்பை உருவாக்கியிருந்த பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா, தற்போது புதிதாக 'கிராந்திவீரா பிரிகேட்' என்ற அமைப்பை அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் பா.ஜ., மூத்த தலைவராக இருந்தவர் ஈஸ்வரப்பா. துணை முதல்வராகவும் இருந்துள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில் சீட் மறுக்கப்பட்டதால், லோக்சபா தேர்தலில் தன் மகனுக்கு சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் கட்சி தலைமை அவரது மகனுக்கு சீட் வழங்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த ஈஸ்வரப்பா, லோக்சபா தேர்தலில் அதிருப்தி வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவர், 'ராயண்ணா பிரிகேட்' என்ற அமைப்புக்கு தலைவராக உள்ளார்.
இந்நிலையில், பிறபடுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்த மடாதிபதிகள், அர்ச்சகர்களுடன் நேற்று முன்தினம் அவர் ஆலோசனை நடத்தினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
பசவன பாகேவாடியில் 2025 பிப்., 4ம் தேதி, ஆயிரக்கணக்கான மக்கள், மடாதிபதிகள் முன்னிலையில், 'கிராந்திவீர பிரிகேட்' துவக்கப்பட உள்ளது. இந்த பிரிகேடில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்படும். இதற்கு விஜயபுரா மாவட்டம், சோமேஸ்வர சுவாமிகள் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வரும் நாட்களில் பிரிகேட் நடவடிக்கையை அமைக்க, அரசியல் தலைவர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும். தேசிய பிரச்னைகள், ஹிந்து மதம் தொடர்பான பிரச்னைகள் வரும் போது, பிரிகேட் தலைவர்கள் விவாதித்து முடிவு செய்து, சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த பாடுபடுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.