ஆப்பரேஷன் தாமரைக்கு பா.ஜ., முயற்சி அமைச்சர் பிரியங்க் கார்கே குற்றச்சாட்டு
ஆப்பரேஷன் தாமரைக்கு பா.ஜ., முயற்சி அமைச்சர் பிரியங்க் கார்கே குற்றச்சாட்டு
ADDED : நவ 19, 2024 06:35 AM

பெங்களூரு: ''பா.ஜ.,வினர் ஆப்பரேஷன் தாமரை நடத்த, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை தொடர்பு கொள்கின்றனர்,'' என, மாநில கிராம அபிவிருத்தித் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே குற்றஞ்சாட்டினார்.
இதுகுறித்து, பெங்களூரில் அவர் நேற்று அளித்த பேட்டி:
பா.ஜ.,வினர் ஆப்பரேஷன் தாமரை நடத்துவதற்கு சாட்சிகள் உள்ளன. மஹாராஷ்டிராவில் அரசை கவிழ்த்தனர். இது போன்று ஏராளமான அரசுகளை கவிழ்த்த உதாரணங்கள் உள்ளன.
தற்போது கர்நாடகாவிலும் ஆப்பரேஷன் தாமரை நடத்த, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை பா.ஜ.,வினர் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களின் முயற்சி பலனளிக்காது.
அரசை கவிழ்க்க 1,000 கோடி ரூபாய் தயாராக உள்ளது என, பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர். அந்த பணத்தை எங்கிருந்து திரட்டினர்? இது 40 சதவீதம் கமிஷன் பணமா?
ஆப்பரேஷன் தாமரையை கர்நாடகாவில் இருந்து பா.ஜ., துவங்கியது. இந்த விஷயத்தில் இது முன்மாதிரியாக அமைந்துள்ளது. எந்த மாநிலத்தில் பா.ஜ., பலவீனமாக உள்ளதோ, அந்த மாநிலங்களில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை தவறாக பயன்படுத்தப்படுகின்றன.
அரசு வகுத்த விதிமுறையின்படி, தகுதியற்றவர்கள் பெற்றுள்ள பி.பி.எல்., ரேஷன்கார்டுகள் ரத்து செய்யப்படுகின்றன. தகுதியற்றவர்கள், ஏழைகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பது, அரசின் நோக்கம்.
ஒரு வேளை பி.பி.எல்., ரேஷன்கார்டு வழங்கும் விதிகளை, மத்திய அரசு மாற்றினால் அதை நாங்களும் பின்பற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

