பா.ஜ.,வுக்கு எகிறிய மவுசு... இண்டி கூட்டணிக்கு சரிவு; சர்வே சொல்வது என்ன?
பா.ஜ.,வுக்கு எகிறிய மவுசு... இண்டி கூட்டணிக்கு சரிவு; சர்வே சொல்வது என்ன?
UPDATED : பிப் 13, 2025 08:51 AM
ADDED : பிப் 13, 2025 08:11 AM

புதுடில்லி: தற்போதைய சூழலில் லோக்சபா தேர்தல் நடந்தால் பா.ஜ., தனிமெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் என்று பிரபல தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு நடந்த லோக் சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 தொகுதிகளில் வெற்றி பெற்று தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. இண்டி கூட்டணி 234 தொகுதிகளை பிடித்தது. பா.ஜ., தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறி வந்த நிலையில், அந்தக் கட்சிக்கு 240 இடங்களே கிடைத்தன. இதனால், கூட்டணி கட்சிகளின் தயவால் ஆட்சியமைத்துள்ளது.
இந்த நிலையில், இன்றைய தேதியில் லோக்சபா தேர்தல் நடந்தால் பா.ஜ., தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று தி இண்டியா டுடே மற்றும் சிஓட்டர் மூட் ஆப் தி நேஷன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
அந்த நிறுவனமானது, ஜன.,2ம் தேதி முதல் பிப்.,9ம் தேதி வரையில் நாடு முழுவதும் 1,25,123 பேரிடம் கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. அதில், ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில், பா.ஜ. கூட்டணி 343 இடங்களை பிடிக்கும் என்று தெரிய வந்துள்ளது. அதேபோல, 232 இடங்களை பிடித்த இண்டி கூட்டணிக்கு 188ஆக குறையும் என்றும் தெரிகிறது.
குறிப்பாக, பா.ஜ., 281 தொகுதிகள் வரை வெற்றி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் 99 தொகுதிகளை பெற்ற காங்கிரசுக்கு 78ஆக குறையும் என்று கருத்துக்கணிப்பில் தெரிய வருகிறது.

