கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்ய கவர்னரிடம் பா.ஜ.,வினர் மனு
கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்ய கவர்னரிடம் பா.ஜ.,வினர் மனு
ADDED : அக் 15, 2024 06:00 AM

பெங்களூரு: 'கர்நாடக மாநில காங்கிரஸ் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்' என, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம், பா.ஜ.,வினர் மனு வழங்கினர்.
பெங்களூரு ராஜ்பவனில் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், மேலவை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமி உட்பட பா.ஜ.,வினர் மனு வழங்கினர்.
பின், அசோக் கூறியதாவது:
மத்திய அரசு, கர்நாடகாவுக்கு குறைந்த மானியம் வழங்கி வருவதாக கூறி வருகின்றனர். முதலில் அவர்கள் வீட்டில் உள்ள அழுக்கை சுத்தம் செய்ய வேண்டும். அவர்களுக்கு பாகுபாடு இல்லை என்பதை தெளிவுபடுத்துங்கள். மத்திய அரசிடம் துாதுக்குழுவாக உங்களுடன் வர தயாராக இருக்கிறோம். ஹூப்பள்ளி காவல் நிலையத்திற்கு தீ வைத்து, கல்லெறிந்த துரோகிகளை ஆதரித்து, அவர்களின் வழக்கை ரத்து செய்யும் மாநில அரசின் முடிவுக்கு எதிரான போராட்டம் இத்துடன் நிற்காது.
மாநில தலைவர் விஜயேந்திராவிடம் பேசி, விரைவில் ஹூப்பள்ளியில் பெரும் போராட்டம் நடத்த உள்ளோம். வழக்கை வாபஸ் பெறும் திட்டம் சரியல்ல என்று அரசுக்கு கடிதம் எழுதுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சலவாதி நாராயணசாமி கூறியதாவது:
மாநில காங்கிரஸ் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கவர்னரிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
துரோகிகள் மீது எங்கள் அரசு வழக்குப் பதிவு செய்தது. இவ்வழக்கு, நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், வழக்கை ரத்து செய்ய, அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
எங்களின் போராட்டம் அதிகரித்ததால், நீதிமன்றம் சம்மதித்தால் மட்டுமே வழக்கை வாபஸ் பெறுவோம் என்று கூறி வருகின்றனர். முதலில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கூறினார்.
15_DMR_0011
கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம், பா.ஜ., தலைவர்கள் மனு வழங்கினர்.