தடையை மீறி கருப்பு தினம்; 'மாஜி' எம்.எல்.ஏ., மீது வழக்கு
தடையை மீறி கருப்பு தினம்; 'மாஜி' எம்.எல்.ஏ., மீது வழக்கு
ADDED : நவ 03, 2024 11:43 PM

பெலகாவி; பெலகாவியில் தடையை மீறி கருப்பு தினம் அனுசரித்த, முன்னாள் எம்.எல்.ஏ., மனோகர் கின்னேகர் உட்பட 46 பேர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.
பெலகாவியை சொந்தம் கொண்டாடி வரும் மராத்தியர்கள், ஆண்டுதோறும் கன்னட ராஜ்யோத்சவா அன்று, பெலகாவியில் கருப்பு தினம் கடைப்பிடிக்கின்றனர். கடந்த 2022ல் கருப்பு தின கொண்டாட்டத்தின் போது, கன்னடர்கள் - மராத்தியர்கள் இடையில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் கடந்த ஆண்டு கருப்பு தினம் கடைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்த ஆண்டும் கருப்பு தினத்திற்கு, கலெக்டர் முகமது ரோஷன் தடை விதித்தார். ஆனாலும் கடந்த 1ம் தேதி கன்னட ராஜ்யோத்சவா அன்று, பெலகாவி நகரில் மராத்தியர்கள் கருப்பு உடை அணிந்து ஊர்வலம் சென்றனர். அப்போது கர்நாடக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். தடையை மீறி கருப்பு தினம் கடைப்பிடித்ததாக, பெலகாவி ரூரல் முன்னாள் எம்.எல்.ஏ., மனோகர் கின்னேகர், எம்.இ.எஸ்., எனும் மராத்திய ஏகிகிரண் சமிதி அமைப்பின் தலைவர்கள் சுபம் ஷலாகே, ரமாகாந்த் கொண்டுஸ்கர் உட்பட 46 பேர் மீது மார்க்கெட் போலீஸ் நிலையத்தில், பெலகாவி தாசில்தார் ஷ்ரவண் நாயக் நேற்று முன்தினம் புகார் செய்தார். இதையடுத்து 46 பேர் மீதும் நேற்று வழக்குப் பதிவானது.