ADDED : ஜூன் 13, 2025 01:54 AM

மூணாறு:மூணாறில் கேரள கவர்னருக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட், இந்திய இளைஞர் பெருமன்ற தொண்டர்கள் கருப்பு கொடி காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உலக சுற்றுச் சூழல் தினமான ஜூன் 5ல் கவர்னர் மாளிகையில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பாரத மாதாவின் படம் பயன்படுத்தப்பட்டது. அந்த படம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பயன்படுத்தும் படம் என கூறி ஆளும் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சின்னக்கானலில் நடக்கும் நிகழ்ச்சிக்கு வந்த கவர்னர், மூணாறில் காலனி ரோட்டில் உள்ள சுற்றுலா துறைக்குச் சொந்தமான நட்சத்திர ஓட்டலில் தங்கினார். அவர் நேற்று மாட்டுபட்டி அணைக்கு சென்று விட்டு மதியம் அறைக்கு திரும்புகையில் இக்கா நகர் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட், இந்திய இளைஞர் பெருமன்றம் ஆகியவற்றைச் சேர்ந்த தொண்டர்கள் 'கவர்னர் கோ பேக்' என்ற வாசகம் அடங்கிய போர்டுகளுடன் கருப்பு கொடி காட்டினர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் வேறு அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை. கருப்பு கொடி காட்டியவர்களுக்கு கை அசைத்தபடி கவர்னர் காரில் சென்றார்.