ADDED : மார் 05, 2024 06:53 AM

மைசூரு: பெங்களூரில் நடந்த குண்டுவெடிப்பு டிரெய்லர் மட்டுமே. மேலும் இத்தகைய சம்பவங்கள் காத்திருக்கின்றன, என பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹா தெரிவித்தார்.
மைசூரில் நேற்று அவர் கூறியதாவது:
தற்போது கர்நாடகாவில், காங்கிரஸ் ஆட்சி உள்ளது. எனவே குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்து உள்ளன. இது டிரெய்லர் மட்டும்தான். வரும் நாட்களில் இத்தகைய சம்பவங்கள் தொடரும்.
கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பே, பிரசாரத்தில் கூறியிருந்தேன். நீங்கள் காங்கிரசுக்கு ஓட்டு போட்டால், தலிபான் அரசு வரும் என, எச்சரித்திருந்தேன். இன்று தலிபான் அரசு நடக்கிறது என்பதற்கு, சம்பவங்கள் சாட்சியாக உள்ளன. விதான் சவுதாவுக்குள், 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என, கோஷமிடுகின்றனர் என்றால், ஆட்சி நடத்துவது யார் என்பது தெளிவாகிறது.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, 10 ஆண்டுகள் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்தன. சின்னச்சாமி ஸ்டேடியம், ஜெர்மன் பேக்கரி, புனே, மும்பை, டில்லி, சூரத் என, நாட்டின் பல இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்தன.
தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு உள்ளது. எனவே குண்டுவெடிப்புகள் துவங்கியுள்ளன. லோக்சபா தேர்தலில் 28க்கு 28 தொகுதிகளில், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணிக்கு வெற்றி பெற்று தாருங்கள். அப்போது தான் கர்நாடகா பிழைக்கும்.
ஒசாமா பின்லேடன், முல்லா உமர் போன்றவர்கள், ஆட்சி நடத்தும் போது, குண்டு வைத்தவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பர். ராமேஸ்வரம் கபேவில் குண்டு வைத்தவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் சித்தராமையா கூறியதை, நாங்கள் வரவேற்கிறோம். அவர் கூறியதை செயலில் காண்பிக்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

