'ஹிந்துத்வா வாட்ச்' முடக்கம் 'எக்ஸ்' தளம் எதிர்ப்பு
'ஹிந்துத்வா வாட்ச்' முடக்கம் 'எக்ஸ்' தளம் எதிர்ப்பு
ADDED : அக் 01, 2024 01:11 AM
புதுடில்லி,பத்திரிகையாளர் ரஹீப் ஹமீது, 'ஹிந்துத்வா வாட்ச்' என்ற அமைப்பை நடத்தி வருகிறார். நாட்டில், சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் தொடர்பான தகவல்களை இதில் அவர் வெளியிட்டு வருகிறார்.
சமூக நல்லிணக்கத்துக்கு எதிராக உள்ளதாக, ஹிந்துத்வா வாட்ச் அமைப்பின் கணக்கை முடக்கும்படி, எக்ஸ் சமூக வலைதளத்துக்கு மத்திய அரசு கடந்த, ஜனவரியில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து ரஹீப் ஹமீது டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில், எக்ஸ் சமூக வலைதளம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ், இந்தக் கணக்கை முடக்கும்படி, மத்திய அரசு உத்தரவிட்டது; அது நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், இந்த உத்தரவு சட்ட விதிகளை மீறுவதாக உள்ளது.
ஒரு குறிப்பிட்ட பதிவு ஆட்சேபகரமாக இருந்தால், அதை முடக்க உத்தரவிடலாம். ஆனால் ஒருவருடைய கணக்கையே முடக்க உத்தரவிட்டுள்ளது முறையானதல்ல. இது பேச்சு சுதந்திரத்துக்கும் எதிரானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, 3ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.