பழைய பஸ்களை உணவகமாக மாற்றுகிறது பி.எம்.டி.சி.,: கேன்டீன் இல்லாத டிப்போக்களில் நிறுத்த முடிவு
பழைய பஸ்களை உணவகமாக மாற்றுகிறது பி.எம்.டி.சி.,: கேன்டீன் இல்லாத டிப்போக்களில் நிறுத்த முடிவு
ADDED : பிப் 22, 2024 11:19 PM
பெங்களூரு: பழைய பஸ்களை உணவகங்களாக மாற்றி, கேன்டீன்கள் இல்லாத டிப்போக்களில் நிறுத்த, பி.எம்.டி.சி., முடிவு செய்துள்ளது. இந்த உணவகத்துக்கு, 'போஜன வண்டி' என, பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பி.எம்.டி.சி., எனும் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம், நகர மக்களின் வாழ்க்கையோடு ஒன்றியுள்ளது. அவர்களின் உயிர் நாடியாக விளங்குகிறது. பயணியருக்கு தரமான போக்குவரத்து சேவை வழங்குவதில், நாட்டில் முன்னணியில் உள்ளது. புதிய வழித்தடங்களில் பஸ்களை இயக்குகிறது.
மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கியும், பி.எம்.டி.சி., பஸ்கள் மீதான மவுசு குறையவில்லை. பெண்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள், ஊழியர்கள் என, லட்சக்கணக்கான மக்கள், தங்களின் அன்றாட போக்குவரத்துக்கு பி.எம்.டி.சி., பஸ்களையே நம்பியுள்ளனர். மக்களின் வாழ்வில், பிரிக்க முடியாத அங்கமாக மாறியுள்ளது.
இதற்கு முன், பெங்களூரு மாநகராட்சி, குடிசைப்பகுதி சிறார்களுக்கு கல்வி அளிக்கும் நோக்கில், பழைய பஸ்களை நடமாடும் பள்ளிகளாக மாற்றியது. இதற்காக பி.எம்.டி.சி.,யிடம் பஸ்களை வாங்கியது.
லட்சக்கணக்கான கி.மீ., தொலைவு ஓடிய பஸ்களை, பழைய இரும்பு கடைக்கு அனுப்புவதை விட, வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்த, பி.எம்.டி.சி., திட்டமிட்டுள்ளது. பஸ்களை உணவகமாக மாற்றி, உணவகங்கள் இல்லாத டிப்போக்களில் நிறுத்த, பி.எம்.டி.சி., முடிவு செய்துள்ளது. இவற்றுக்கு, 'போஜன வண்டி' என, பெயர் சூட்டப்பட உள்ளது.
இது தொடர்பாக, பி.எம்.டி.சி., நிர்வாக இயக்குனர் ராமசந்திரா கூறியதாவது:
பழைய பஸ்களை, 'போஜன வண்டி' என்ற பெயரில், உணவகமாக மாற்றி கேன்டீன் இல்லாத டிப்போக்களில் நிறுத்த, பி.எம்.டி.சி., திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக, போக்குவரத்தை நிறுத்திய ஒரு பஸ்சை, உணவகமாக மாற்றியுள்ளோம். இந்த போஜன வண்டி, யஷ்வந்த்பூர் அல்லது பீன்யா டிப்போக்களில் வைக்கப்படும்.
பஸ்சின் இரண்டு ஓரங்களிலும், 'போஜன வண்டி. வாருங்கள் அமர்ந்து உணவருந்தலாம்' என, எழுதப்பட்டுள்ளது. பஸ்சின் இருக்கைகளை அகற்றி, உணவருந்த வசதியாக மேஜைகள், இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. கை கழுவும் பேசின், மின் விசிறி, குடிநீர் வசதி உள்ளன. மேற்கூரையில் கண்ணாடி ஜன்னல் உள்ளது.
காற்று, வெளிச்சத்துக்காக பஸ்சின் இரண்டு ஓரங்களிலும், ஜன்னல்கள் வைக்கப்பட்டுள்ளன. மேற்கூரையில் தண்ணீர் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. ஹோட்டல்களில் உள்ள அனைத்து வசதிகளும், போஜன வண்டியில் இருக்கும்.
பெங்களூரில் 49 பி.எம்.டி.சி., டிப்போக்கள் செயல்படுகின்றன. இவற்றில், 17 டிப்போக்களில் உணவகங்கள் இல்லை.
பி.எம்.டி.சி., ஊழியர்களுக்கு, மிகவும் குறைந்த விலையில் உணவு, சிற்றுண்டி வழங்க இந்த போஜன வண்டி பயன்படுத்தப்படும். உணவகத்தை பி.எம்.டி.சி.,யே நடத்துவதா அல்லது தனியாரிடம் ஒப்பந்தத்துக்கு ஒப்படைப்பதா என, ஆலோசித்து முடிவு செய்யப்படும்.
பி.எம்.டி.சி.,யின் தொழில்நுட்ப பொறியாளர்கள், எங்களிடம் உள்ள உபகரணங்களை வைத்து, மிக சிறப்பான உணவகத்தை வடிவைத்துள்ளனர். இந்த புதிய போஜன வண்டி, தேவையான இடங்களில் நிறுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.