ADDED : ஜன 20, 2025 01:50 AM
கடிஹார் : பீஹாரின் கங்கை ஆற்றில் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மாயமான நான்கு பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பீஹாரில் கடிஹார் மாவட்டத்தின் தெற்கு கரிமுல்லாபூர் பகுதி யைச் சேர்ந்த 17 பேர், ஜார்க்கண்டின் சாஹிப்கஞ்ச் பகுதிக்கு கங்கை ஆற்றின் வழியாக படகில் நேற்று சென்றனர்.
கோலாகாட் அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக அப்படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து வந்த மாநில பேரிடர் மீட்புப் படையினர், உள்ளூர் மக்களின் உதவியுடன் ஆற்றில் சிக்கி தவித்த நபர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
படகில் சென்ற 17 பேரில், 10 பேர் நீந்தி ஆற்றின் கரையை வந்தடைந்தனர்.
மூன்று பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதில் பவன் குமார், 60, சுதிர் மண்டல், 70, ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
உயிரிழந்த 1 வயது குழந்தையின் பெற்றோரை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையே மாயமான நான்கு பேரை, தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. கங்கை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன், விபத்து நிகழ்ந்த பகுதி மிகுந்த ஆழமாக உள்ளது.
இதன் காரணமாக மீட்பு பணி சவால் நிறைந்ததாக உள்ளதாக, மாநில பேரிடர் மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.