ஆக்ராவில் கடத்தப்பட்ட சிறுவன் உடல் ராஜஸ்தானில் கண்டுபிடிப்பு
ஆக்ராவில் கடத்தப்பட்ட சிறுவன் உடல் ராஜஸ்தானில் கண்டுபிடிப்பு
ADDED : ஜூலை 20, 2025 10:46 PM
ஆக்ரா:உத்தர பிரதேசத்தில், 80 லட்சம் ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட, எட்டு வயது சிறுவன் உடல், ராஜஸ்தான் மாநில கிராமத்தில் மீட்கப்பட்டது.
உ.பி., மாநிலம் ஆக்ரா விஜய் நகரில் டிராவல்ஸ் நடத்துபவர் விஜய் பிரதாப். இவரது மகன் அபய், 8. ஒன்றாம் வகுப்பு படித்தான். ஏப்ரல், 30ம் தேதி வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த அபய் மாயமானான்.
இதுகுறித்து, விஜய் கொடுத்த புகார்படி ஆக்ரா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். அண்டை மாநில போலீசுக்கும் தகவல் அனுப்பப்பட்டது.
இதற்கிடையில், அபயைக் கடத்திச் சென்றவர்கள், 80 லட்சம் ரூபாய் கேட்டு, விஜய் பிரதாபுக்கு கடிதம் அனுப்பினர். பணத்துக்கான ஏற்பாடுகளை விஜய் செய்து வந்தார்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் மேனியா கிராமத்தில் புதைக்கப்பட்டு இருந்த சிறுவன் உடலை போலீசார் மீட்டனர். ஆய்வு செய்த போது ஆக்ராவில் மாயமான சிறுவன் அபய் என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து, ஆக்ரா போலீசுக்கு தகவல் கொடுத்தனர். ஆக்ரா போலீஸ் துணைக் கமிஷனர் அமர்தீப் லால் தலைமையில் போலீசார் சென்று, அபய் உடலை மீட்டு, ஆக்ரா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை நடக்கிறது.