தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்ட பெண் உடல் கண்டெடுப்பு; பஸ் டிரைவர் சிக்கினார்
தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்ட பெண் உடல் கண்டெடுப்பு; பஸ் டிரைவர் சிக்கினார்
ADDED : நவ 15, 2025 10:31 PM
நொய்டா: கழிவுநீர் கால்வாயில் தலை மற்றும் கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் உடல் கண்டெடுக்கப்பட்டது. கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், பஸ் டிரைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
புதுடில்லி அருகே நொய்டா 39வது செக்டார் கழிவுநீர் கால்வாயில், 6ம் தேதி தலை மற்றும் கை,கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் உடல் கிடந்தது. தகவல் அறிந்து சென்ற போலீசார் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கொலை வழக்கு பதிவு செய்தனர்.
44 வாகனங்கள் அந்தப் பகுதியில் உள்ள 5,000க்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், 44 வாகனங்கள் சந்தேகப்பட்டியலில் கொண்டு வரப்பட்டன. அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
பெண் உடல் கிடந்த கழிவுநீர் கால்வாய் அருகே, 5ம் தேதி சென்ற பஸ் மீது போலீசுக்கு சந்தேகம் வலுத்தது. உத்தரப் பிரதேச மாநில பதிவு எண் கொண்ட அந்த பஸ்சின் டிரைவர் மோனு சிங் என்கிற மோனு சோலங்கி, நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில் பிரீத்தி தேவி என்ற பிரீத்தி யாதவ்,34, என்ற பெண்ணை ஆறு நாட்களாக காணவில்லை என்ற தகவலும் கிடைத்தது. மோனுவிடம் நடத்திய விசாரணையில், பிரீத்தியுடன் அவருக்கு தொடர்பு இருந்தது தெரிய வந்தது. பஸ், ரத்தக்கறை படிந்த பாய், பிரீத்தியின் உடைகள் மற்றும் இதர தடயங்களை மோனுவிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசில் மோனு அளித்த வாக்குமூலம்”
பரோலாவில் உள்ள ஆடை தொழிற்சாலையில் தன் தாயுடன் பணிபுரிந்த பிரீத்திக்கும் எனக்கும் தொடர்பு ஏற்பட்டது. நாளடைவில் பிரீத்தி என்னிடமிருந்து பணம் பறிக்கத் துவங்கினார். மேலும், என் இரண்டு மகள்களை சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி விடுவதாகவும் மிரட்டி வந்தார்.
வாக்குவாதம் கடந்த, 5ம் தேதி பிரீத்தியை பஸ்சில் அழைத்துச் சென்றேன். பஸ்சுக்குள் இருவரும் உணவு சாப்பிட்டோம். அப்போது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பிரீத்தியை சரமாரியாக தாக்கி கொலை செய்தேன். அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக தலை மற்று கை, கால்களை துண்டித்தேன். உடலை மட்டும் நொய்டா கழிவுநீர் கால்வாயில் வீசினேன். தலை மற்றும் கை,கால்களை காஜியாபாத் சித்தார்த் விஹார் வாய்க்காலில் வீசினேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பிரீத்தியின் தலை மற்றும் கை,கால்களை தேடும் பணி நடக்கிறது.

