போலீசார் மீது வெடிகுண்டு தாக்குதல்: கம்யூ., வேட்பாளர் உள்ளிட்ட இருவருக்கு 10 ஆண்டு சிறை
போலீசார் மீது வெடிகுண்டு தாக்குதல்: கம்யூ., வேட்பாளர் உள்ளிட்ட இருவருக்கு 10 ஆண்டு சிறை
ADDED : நவ 25, 2025 04:03 PM

கண்ணுார்: போலீசார் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்திய வழக்கில் கம்யூ., வேட்பாளர் உள்ளிட்ட இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கண்ணுார் கோர்ட் உத்தரவிட்டது.
கேரளாவில் முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பு தலைவர் ஷுஹைப் கொலையில் சிபிஐ(எம்) தலைவர் பி. ஜெயராஜன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 2012 ஆகஸ்ட் 1 அன்று பையனூரில் காவல்துறையினர் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு கண்ணுார் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில், ஜனநாயக வாலிபர் சங்க தலைவரும் பையனூர் நகராட்சி தேர்தலில் இடது ஜனநாயக முன்னணியின் வேட்பாளராக போட்டியிடும் வி.கே. நிஷாத் 35, மற்றும் டி.சி.வி. நந்தகுமார் (35). ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு இன்று வந்தது.
கண்ணூர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
2012-ஆம் ஆண்டு காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் வழக்கில், சிபிஐ(எம்) வேட்பாளர் வி.கே. நிஷாத் மற்றும் மற்றொரு நபரான டி.சி.வி. நந்தகுமார் ஆகியோருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இருவருக்கும் தலா ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.
போதிய ஆதாரங்கள் இல்லாததால், மற்ற இரண்டு குற்றவாளிகளான ஏ. மிதுன் மற்றும் கே.வி. கிரிபேஷ் விடுவிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

