நீர்மூழ்கிகளை அழிக்கும் போர்க்கப்பல்; ஐ.என்.எஸ்., மாஹே கடற்படையில் இணைப்பு
நீர்மூழ்கிகளை அழிக்கும் போர்க்கப்பல்; ஐ.என்.எஸ்., மாஹே கடற்படையில் இணைப்பு
ADDED : நவ 25, 2025 06:04 AM

மும்பை: எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் உடைய, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ்., மாஹே போர்க்கப்பல் கடற்படையில் நேற்று இணைக்கப்பட்டது.
மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஐ.என்.எஸ்., மாஹே போர்க்கப்பல் நம் கடற் படையில் நேற்று முறைப்படி இணைக்கப்பட்டது.
கேரளாவின் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில், தயாரிக்கப்பட்ட இந்த கப்பலின் 80 சதவீத பகுதி, 'ஆத்மநிர்பர் பாரத்' எனப்படும், சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டது.
நம் ராணுவ தளபதி உபேந்திர திவேதி, ஐ.என்.எஸ்., மாஹே போர்க்கப்பலை இயக்கி வைத்து கடற்படையில் இணைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
நம் முப்படைகளும் ஒன்றோடு ஒன்றாக இணைந்து செயல்படுவதால், 'சினர்ஜி' எனப்படும் ஒருங்கிணைந்த சக்திகளாக விளங்குகின்றன. இதற்கு பாகிஸ்தானுக்கு எதிராக நாம் மேற்கொண்ட, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை யே மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.
கடல், நிலம், வானம் ஆகியவை நம் தேச பாதுகாப்புக்கு முக்கியமான இடங்கள். இந்த மூன்று இடங்களிலும், நம் முப்படைகளும் திறமையாக பணியாற்றி வருகின்றன.
லடாக் முதல் இந்திய பெருங்கடல் வரை, தகவல் போர் முதல் தளவாடங்கள் வரை, ஒவ்வொரு களத்திலும், நம் ஆயுதப்படைகள் தயார் நிலையில் உள்ளன. உலகளாவிய பதற்றமான சூழலில், பாதுகாப்பு பணியில் நம் கடற்படைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தற்போது இணைக்கப்பட்டுள்ள ஐ.என்.எஸ்., மாஹே, அந்தப் பணிக்கு மேலும் வலுசேர்க்கும். உலகெங்கிலும் உள்ள மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகளின் போது, நம் ராணுவமும், கடற்படையும் தோளோடு தோளாக நின்று செயல் படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
கப்பலின் சிறப்பு அம்சங்கள் ஐ.என்.எஸ்., மாஹே என்பது ஏ.எஸ்.டபிள்யு., - எஸ்.டபிள்யு.சி., எனப்படும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்களின் தொடரின் முதன்மையானது இது, எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை துல்லியமாக கண்டறிந்து தாக்கும் திறன் உடையது நம் நாட்டின் கடலோரப் பகுதிகளைப் பாதுகாக்கவும், நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட்டுகள், ஏவுகணைகள் போன்றவற்றை ஏந்திச் செல்லும் வகையிலும் ஐ.என்.எஸ்., மாஹே வடிவமைக்கப்பட்டுள்ளது கேரள கடற்கரை நகரமான மாஹேவின் பெயரால் அழைக்கப்படும் இந்த போர்க்கப்பலின் முகப்பில், அம்மாநில பாரம்பரிய கலையான களரிப்பயட்டை நினைவுகூரும் வகையில், உருமி எனப்படும் சுருள்வாள் படம் இடம்பெற்றுள்ளது இது, இந்த கப்பலின் வேகத்தையும், துல்லியத்தையும், அபாரமான வலிமையையும் குறிக்கிறது.

