எரிமலை வெடிப்பால் இந்தியா திரும்பிய 'இண்டிகோ' விமானம்
எரிமலை வெடிப்பால் இந்தியா திரும்பிய 'இண்டிகோ' விமானம்
ADDED : நவ 25, 2025 05:55 AM

ஆமதாபாத்: கேரளாவின் கண்ணுாரில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபி நோக்கி சென்ற, 'இண்டிகோ' விமானம், எத்தியோப்பியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால், ஆமதாபாதிற்கு திருப்பி விடப்பட்டது.
கேரளாவில் கண்ணுார் விமான நிலையத்தில் இருந்து, 'இண்டிகோ' நிறுவனத்தின் 6E 1433 விமானம், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபிக்கு நேற்று புறப்பட்டது.
விமானம் நடுவானில் பறந்த போது, கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவின் அபார் மாகாணத்தில் உள்ள ஹேலி குப்பி என்ற எரிமலை, 10,000 ஆண்டுகளுக்கு பின் வெடித்துச் சிதறியதாக தகவல் கிடைத்தது.
இதனால், வான் அளவுக்கு கரும்புகை சூழ்ந்து விமான போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனால், அந்த இண்டிகோ விமானம் அபுதாபிக்கு செல்லாமல், குஜராத்தின் ஆமதாபாத் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. அங்கு விமானம் பத்திரமாக தரையிறங்கியது.

