மோசடிக்கு பயன்படும் 'சிம் கார்டு' உரிமையாளருக்கு... சிறை தண்டனை! அடையாளம் தெரியாத அழைப்பு மீது எச்சரிக்கை அவசியம்
மோசடிக்கு பயன்படும் 'சிம் கார்டு' உரிமையாளருக்கு... சிறை தண்டனை! அடையாளம் தெரியாத அழைப்பு மீது எச்சரிக்கை அவசியம்
ADDED : நவ 25, 2025 05:00 AM

புதுடில்லி: ஒருவரின் பெயரில் பதிவான, 'மொபைல் போன்' எண்ணை, சைபர் மோசடி உட்பட சட்டவிரோத செயல்களுக்கு தவறாக பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட மொபைல் போன் சந்தாதாரர் மீது சட்ட நடவடிக்கை பாய வாய்ப்புள்ளதாக மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீபகாலமாக, நிதி சார்ந்த மற்றும் போலி சிம் கார்டுகளை கொண்டும் மோசடிகள் அரங்கேறி வருகின்றன. இதுபோன்ற குற்றச்செயல்களில் தனி நபர்களின் மொபைல் போன் எண்களை பயன்படுத்தி மோசடி நபர்கள் அதிகளவு ஈடுபடுவது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்புத்துறை வெளியிட்ட அறிக்கை:
தனி நபர்கள், தங்கள் சிம் கார்டுகள் மற்றும் மொபைல் போன்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவர்களின் பொறுப்பு.
மொபைல் போன் சந்தாதாரரின் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களில் காணப்படும் எந்தவொரு தவறான பயன்பாடும் தொலைத்தொடர்புச் சட்டம், 2023ன் கீழ் சட்டரீதியான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
ஒவ்வொருவரும் தங்கள் மொபைல் போனில் உள்ள ஐ.எம்.இ.ஐ., எனப்படும் சர்வதேச மொபைல் சாதன எண் சேதப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை சரிப்பார்ப்பது அவசியம்.
குற்றச்செயல் அவ்வாறு சேதமடைந்த மொபைல் போன்கள், சிம் கார்டுகள், மோடம் போன்ற சாதனங்களை பயன்படுத்துதல் சட்டவிரோத செயல்களுக்கு வழிவகுக்கும்.
இதுதவிர மோசடி ஆவணங்கள் அல்லது ஆள்மாறாட்டம் மூலம் சிம் கார்டுகளை வாங்குதல் போன்றவை குற்றச்செயலாக கருதப்படும்.
எனவே, மொபைல் போன் சந்தாதாரர்கள், தங்கள் சிம் கார்டுகளை அடையாளம் தெரியாத நபர்களிடம் ஒப்படைப்பதை தவிர்க்க வேண்டும்.
ஒருவரின் சிம் கார்டு தவறாக பயன்படுத்தப்படும்பட்சத்தில், அந்த சிம் கார்டு பதிவுசெய்யப்பட்ட பயனர் மீது தொலைத்தொடர்புச் சட்டம், 2023ன் கீழ் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இச்சட்டத்தின் கீழ் குற்றச்செயல் உறுதிப்படுத்தப்பட்டால், மூன்று ஆண்டுகள் வரை சிறையும், 50 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வழிவகைச் செய்யப்படும்.
இதன்படி மொபைல் போனில் உள்ள சாதனங்களை மாற்றவோ, சேதப்படுத்தவோ இச்சட்டம் தடைவிதித்துள்ளது.
இதேபோல் மொபைல் போன் செயலி மற்றும் இணைய வழியாகவும் சைபர் மோசடிகளை அரங்கேற்றுகின்றனர். எனவே, அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து வரும் அழைப்புகள் மீது பொதுமக்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
இணையதளம் இந்நிலையில், மொபைல் போன் பயன்பாட்டை பாதுகாப்பாக மேற்கொள்ள ஏதுவாக, மத்திய அரசின், 'சஞ்சார் சாத்தி' செயலி அல்லது இணையதளம், பயனர்களுக்கு உதவும்.
இதன்மூலம் ஒவ்வொரு வரும் தங்களின் மொபைல் போனின் ஐ.எம்.இ.ஐ., எண் சரிப்பார்ப்பு, தயாரிப்பின் விபரங்கள், சிம் கார்டுகளின் பயன்பாடு உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளலாம்.
இவை, ஒருவரின் மொபைல் போன் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வழிவகுக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

