ADDED : பிப் 15, 2024 04:56 AM

பெங்களூரு : ஏ.டி.எம்., முன்பு இருந்த, மூன்று இரும்பு பெட்டிகளால், வெடிகுண்டு பீதி ஏற்பட்டது.
பெங்களூரு மினர்வா சதுக்கத்தில் கோடக் மஹிந்திரா வங்கிக்கு சொந்தமான, ஏ.டி.எம்., மையம் உள்ளது. நேற்று காலை ஏ.டி.எம்., மையத்தின் காவலாளி பணிக்கு வந்தார். அப்போது ஏ.டி.எம்., வாசலில், மர்மமான முறையில், மூன்று இரும்பு பெட்டிகள் இருந்தன.
இதுகுறித்து ஹொய்சாளா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த போலீசார், இரும்பு பெட்டிகளில் வெடிகுண்டு இருக்கலாம் என்று நினைத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து மோப்ப நாயுடன், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அங்கு வந்தனர். இதனால் ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க வந்தவர்கள் பீதி அடைந்தனர். மூன்று பெட்டிகளையும் திறந்து பார்த்த போது, அதற்குள் ஒன்றுமே இல்லை.
அந்த பெட்டிகள் ஏ.டி.எம்.,மில் நிரப்ப பணம் கொண்டு வர பயன்படுத்தப்படுபவை என்றும், ஊழியர்கள் மறந்து விட்டு சென்றதும் தெரிந்தது.

